ADDED : டிச 10, 2024 11:55 PM

கோவை; வாடகைக் கட்டடத்தில் இயங்கும் தொழில் நிறுவனங்களுக்கு, 18 சதவீத ஜி.எஸ்.டி., விதிப்பு, சொத்துவரி, மின்கட்டண உயர்வு ஆகியவற்றைக் கண்டித்து மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோவை, எம்.எஸ்.எம்.இ., சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
கோவை, தெற்கு தாலுகா அலுவலகம் முன் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு, கோவை எம்.எஸ்.எம்.இ., சங்க தலைவர் மணி தலைமை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில், 'வாடகைக் கட்டடத்தில் இயங்கும் தொழில் நிறுவனங்களுக்கு 18 சதவீத ஜி.எஸ்.டி.,யை ரத்து செய்ய வேண்டும்; ஜாப் ஒர்க் நிறுவனங்களுக்கு 5 சதவீத ஜி.எஸ்.டி., என்ற தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்; உயர்த்திய தொழில்வரி, மின் கட்டண உயர்வை மாநில அரசு ரத்து செய்ய வேண்டும்; வாராக்கடன் அறிவிப்பை வங்கிகள் ஆறு மாதங்களாக மாற்ற வேண்டும்' என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, கோஷங்கள் எழுப்பப்பட்டன.
சி.ஐ.டி.யூ., மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, கோவை கம்ப்ரசர் இண்டஸ்ட்ரீஸ் சங்க தலைவர் ரவீந்தரன், கோவை எம்.எஸ்.எம்., சங்க செயலாளர் பாண்டியன் உட்பட சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
