/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆள் கடத்தலில் போலீஸ் ஐ.ஜி.,-"அண்ணாச்சி' தொடர்பு
/
ஆள் கடத்தலில் போலீஸ் ஐ.ஜி.,-"அண்ணாச்சி' தொடர்பு
ADDED : ஜூலை 19, 2011 12:34 AM
கோவை : திருப்பூரில் 1,200 கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்ட 'பாஸி குரூப்' நிறுவன பெண் இயக்குனரை போலீசார் கடத்தி, 2.95 கோடி ரூபாய் பறித்த வழக்கின் விசாரணையை, சி.பி.ஐ., முழுவீச்சில் மேற்கொண்டுள்ளது.
டி.எஸ்.பி.,யை கைது செய்து முக்கிய தகவல்களை கறந்துள்ள சி.பி.ஐ., அதிகாரிகள், இவ்வழக்கில் தொடர்புடையவர்களாக கருதப்படும் போலீஸ் ஐ.ஜி., மற்றும் அவருக்கு நெருக்கமான 'அண்ணாச்சி' என்பவரை விசாரணைக்கு உட்படுத்த திட்டமிட்டுள்ளனர்.
திருப்பூரை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்ட'பாஸி குரூப் ஆப் கம்பெனீஸ்' என்ற நிறுவனம்,'கரன்சி டிரேடிங்' உள்ளிட்ட பல்வேறு வர்த்தகங்களில் ஈடுபட்டது. பொதுமக்கள் முதலீடு செய்யும் தொகைக்கு அதிகலாபம் அளிப்பதாக அறிவித்த இந்நிறுவனம் தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 10 ஆயிரம் பேரிடம் ஆயிரத்து 200 கோடி ரூபாய் வரை முதலீடாக பெற்றது. அடுத்த சில மாதங்கள் மட்டும் முதலீட்டாளர்களுக்கு லாபத் தொகையை வழங்கிய நிறுவனம், பின்னர் மூடுவிழா கண்டது. அதன் இயக்குனர்கள் திருப்பூரைச் சேர்ந்த கதிரவன் (52), அவரது மகன் மோகன்ராஜ் (37), சென்னையைச் சேர்ந்த கமலவள்ளி(50) ஆகியோர் தலைமறைவாகினர்.
பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்களின் புகாரை தொடர்ந்து, மோசடி வழக்குப்பதிவு செய்த திருப்பூர் மத்திய குற்றப்பிரிவு போலீசார், நிறுவன இயக்குனர் கமலவள்ளியை கடத்தி சிறைவைத்து 2.95 கோடி ரூபாயை பறித்தனர். பணம் பறிப்பில் போலீஸ் அதிகாரிகள் சம்பந்தப்பட்டிருப்பதால், இவ்வழக்கின் விசாரணையை சி.பி.ஐ.,க்கு மாற்றி சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது. விசாரணைக்கு உள்ளாக்கப்பட வேண்டிய உயரதிகாரிகளின் பட்டியலில், முன்பு கோவையில் பணியாற்றிய ஐ.ஜி., ஒருவர் முக்கியமானவராக கருதப்படுகிறார். மேலும், அந்த அதிகாரியை அடிக்கடி சந்தித்த 'ஜான்' பெயர் கொண்ட 'அண்ணாச்சி' என்பவரையும் சி.பி.ஐ., அதிகாரிகள் தேடுகின்றனர்.
ஐ.ஜி.,தொடர்பு அம்பலம் : 'பாஸி' நிறுவன இயக்குனர் கமலவள்ளி கடத்தப்பட்டபின், அவரது உதவியாளர்கள் மூலமாக இரண்டு, மூன்று முறை 2.95 கோடி ரூபாய் வரை போலீஸ் அதிகாரிகளுக்கு கைமாறியுள்ளது. பணம் பறிப்பு நடந்த நாட்களில் கமலவள்ளி, 'அண்ணாச்சி' மற்றும் போலீஸ் அதிகாரிகளின் மொபைல் போன் பேச்சு தொடர்புகள் குறித்த தகவல், ரகசியமாக சேகரிக்கப்பட்டுள்ளன. ஆள் கடத்தல், பணம் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்ட நபர்களின் மொபைல் போன்களில் இருந்து, குறிப்பிட்ட ஐ.ஜி.,க்கும் பல 'போன் கால்'கள் சென்றுள்ளன; அதுவும், சம்பவம் நடந்த நாள், நேரங்களுடன் ஒத்துப்போவதாக கூறப்படுகிறது.