/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தி.மு.க., ஆர்ப்பாட்டம்: 2,300 பேர் கைது
/
தி.மு.க., ஆர்ப்பாட்டம்: 2,300 பேர் கைது
ADDED : ஆக 01, 2011 10:26 PM
கோவை : 'தமிழக அரசு பொய்வழக்கு போடுவதை கைவிட வேண்டும்' என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட, கோவை மாவட்ட தி.மு.க.,வினர் கைது செய்யப்பட்டு, சிறிது நேரத்தில் விடுவிக்கப்பட்டனர்.
கோவை மாவட்ட தி.மு.க., சார்பில், காந்திபுரம் தமிழ்நாடு ஓட்டல் முன், தடையை மீறி நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் தலைமை வகித்தார். தி.மு.க.,வினர் மீது பொய்வழக்கு போடுதல் மற்றும் சமச்சீர் கல்வியை அமல்படுத்தாததற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. பொள்ளாச்சி, சூலூர், மேட்டுப்பாளையம் என, மாவட்டம் முழுவதும் இருந்து ஏராளமான தி.மு.க.,வினர் பங்கேற்றனர். இதனால், காந்திபுரம் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. காலை 10.00 மணி முதல் பகல் 12.00 மணி வரை ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டம் துவங்கிய சிறிது நேரத்திலேயே, போலீசார் கைது நடவடிக்கையை துவக்கினர். புற்றீசல் போல் தி.மு.க.,வினர் வந்து கொண்டிருந்ததால், போலீசார் வாகனங்கள் பற்றாக்குறையானது. டவுன் பஸ்கள் வரவழைக்கப்பட்டு, கைது நடவடிக்கை தொடர்ந்தது. தொண்டர்கள் அனைவரும் கைது செய்யப்படும் வரை, கட்சி பிரமுகர்கள் கோஷம் எழுப்பிக் கொண்டிருந்தனர். தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால், 2,300 தி.மு.க.,வினர் கைது செய்யப்பட்டனர். இதில், 250 பெண்கள் அடங்குவர். கைது செய்யப்பட்ட தி.மு.க.,வினர், விக்னேஷ் மஹால், பாடியார், பாலகிருஷ்ணா, பி.வி.ஜி., மாநகராட்சி மண்டபம் ஆகிய திருமண மண்டபங்களுக்கு கொண்டு செல்லப்பட்டனர். பின், சிறிது நேரத்தில் தி.மு.க.,வினர் விடுவிக்கப்பட்டனர். ஆர்ப்பாட்டத்தில், முன்னாள் எம்.பி., ராமநாதன், முன்னாள் எம்.எல்.ஏ.,கள் கண்ணப்பன், அருண்குமார், பொன்முடி, நடராஜ், மாநகர மாவட்ட செயலாளர் வீரகோபால், துணைமேயர் கார்த்தி உள்ளிட்ட தி.மு.க., பிரதிநிதிகள் பங்கேற்றனர்.