/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
10 வயது சிறுவன் உடலில் ஒன்பது ஆபரேஷன்!
/
10 வயது சிறுவன் உடலில் ஒன்பது ஆபரேஷன்!
ADDED : ஆக 01, 2011 10:31 PM
கோவை : கடந்த 2010 ஜனவரி 24ம் தேதி...மாலை ஆறு மணிக்கு கடைக்கு மிட்டாய் வாங்க, சிட்டாக பறந்து சென்ற அந்த ஏழு வயது சிறுவனை, சிதைத்து சின்னபின்னமாக்கப்பட்ட நிலையில் தூக்கி வந்து போடுவார்கள் என யாரும் எதிர்பார்க்கவில்லை.
இன்று தலை உட்பட உடலில் ஒன்பது இடங்களில் அறுவை சிகிச்சை செய்த நிலையில், துவைத்துப் போட்ட துணியாக வெறித்துப் பார்க்கிறான், அந்த பச்சிளம் பாலகன். மோதித் தள்ளி விட்டு சென்ற கார் உரிமையாளர் மீது போலீசார் நடவடிக்கை எடுக்காததால், சிகிச்சைக்கு செலவிட முடியாமல் திணறி நிற்கின்றனர் சிறுவனின் ஏழை பெற்றோர்.கணபதி சங்கனூர் பகுதியை சேர்ந்த ராம்குமார்-லதா தம்பதியரின் இரண்டாவது மகன் சண்முக சரவணன்(10), வீட்டின் செல்லப்பிள்ளை. இரண்டு ஆண்டுகளுக்கு முன் வீட்டின் அருகில் இருந்த பெட்டிக் கடையில் மிட்டாய் வாங்கச் சென்ற சிறுவனை, அவ்வழியே தாறுமாறாக வந்த ஒரு மாருதி கார் மோதித்தள்ளி விட்டு பறந்தது.ரத்த வெள்ளத்தில் துடித்த சிறுவனை அள்ளிப் போட்டுக் கொண்டு மருத்துவமனைக்கு சென்ற பெற்றோர், சிறுவனின் உடலில் ஒன்பது ஆபரேஷன்கள் செய்தால்தான் ஓரளவுக்கு நடமாட செய்ய முடியும் என டாக்டர்கள் கூறியதைக் கேட்டு அதிர்ந்தனர். சாதாரண கூலி வேலை செய்து வந்த ராம்குமார், லட்சக்கணக்கான ரூபாய்களை கடன் வாங்கியும் இருப்பதையெல்லாம் விற்றும் சிகிச்சை செலவுகளை சமாளித்தார். உடல் முழுக்க வடுக்களுடன் மருத்துவமனையை விட்டு சிறுவன் வந்து விட்டாலும், இடுப்பில் 'ஸ்டீல் பிளேட்' வைக்கப்பட்டுள்ளதால் சுயமாக காலூன்றி நிற்க முடியவில்லை. இதைத் தவிர, வயிறு, தொடை, தொண்டை உள்ளிட்ட இடங்களிலும் ஆபரேஷன் செய்த வடுக்கள், நடந்த கொடூரத்துக்கு சாட்சி கூறுகின்றன. இத்தனை ஆபரேஷன்கள் முடிந்தும் சாதாரண சிறுவர்களைப் போல், சுய நினைவுடன் பேச முடியவில்லை. மோதிச் சென்ற கார் உரிமையாளர் மீது புகார் செய்தும், உரிய நடவடிக்கை எடுக்காததால் இதுவரை எந்த உதவியும் கிடைக்கவில்லை.துள்ளிக் குதித்து விளையாடிய சிறுவனின் படிப்பும், துடிப்பும் ஓய்ந்து போனது. அம்மாவின் மடியில் படுத்தபடி முகத்தையே பார்த்தபடி கிடக்கும் அவனின் கன்னத்தில், ஆறுதலாக உள்ளங்கையை வைத்து கண்ணீர் விடுவதைத் தவிர பெற்றத் தாயால் எதுவும் செய்ய முடியவில்லை. தனது மகனை இந்த நிலைக்கு ஆளாக்கிய கார் உரிமையாளரிடம் நஷ்ட ஈடு பெற்றுத் தரக் கோரி, நேற்று கலெக்டர் கருணாகரனின் காலில் விழுந்து அழுதனர் பெற்றோர். பெற்றோர் கூறுகையில், ''உடலில் ஒன்பது இடத்தில் ஆபரேஷன் செய்துள்ளோம். பொதுமக்கள் மற்றும் காப்பீடு திட்டத்தின் மூலம் கிடைத்த பணம்தான் சிகிச்சைக்கு உதவியது. மூளையில் இன்னும் ஓர் ஆபரேஷன் செய்தால் பழைய நிலைக்கு கொண்டு வரலாம் என்கின்றனர் டாக்டர்கள். அதற்கு பணம் இல்லை. சிகிச்சைக்கு அங்கும் இங்கும் தூக்கிக் கொண்டு அடிக்கடி செல்ல வேண்டியதுள்ளதால், வேலைக்கும் சரியாக போக முடிவதில்லை. மூத்த மகளின் படிப்பையும் பாதியில் நிறுத்த வேண்டியதாகி விட்டது.''.''குடிபோதையில் தாறுமாறாக காரை ஓட்டியதுதான் விபத்துக்கு காரணம் என விபத்தை நேரில் கண்டவர்கள் கூறுகின்றனர். கார் உரிமையாளரிடம் நஷ்ட ஈடு பெற்றுத் தரக் கோரி பி 3 போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்தோம். என்ன பிரிவில் வழக்கு பதிவு செய்தார்களோ தெரியவில்லை... விபத்து ஏற்படுத்தியவர் கோர்ட்டில் 4,000 ரூபாய் அபராதம் செலுத்தி வழக்கை முடித்துக் கொண்டார். அவரைப் பிடித்து கோர்ட்டில் நிற்க வைத்து, நஷ்ட ஈடு பெற்றுத் தர வேண்டும். உதவும் மனசுள்ள யாராவது இருந்தால் சொல்லுங்களேன்...!''.கண்ணீர் மல்க அந்த ஏழை பெற்றோர் கேட்ட கேள்விக்கு, ஈர மனதுள்ளவர்களிடம் இருக்கிறது பதில்!