/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
"பல்லாங்குழி'யானது மாற்று பாதை: வாகனங்கள் திணறல்
/
"பல்லாங்குழி'யானது மாற்று பாதை: வாகனங்கள் திணறல்
ADDED : ஆக 22, 2011 11:05 PM
பொள்ளாச்சி : பொள்ளாச்சி அடுத்த மோதிராபுரம் செல்லும் ரோடு போக்குவரத்துக்கு பயன்படுத்த முடியாமல், குண்டும், குழியுமாக இருப்பதால், பஸ், லாரி உள்ளிட்ட கன ரக போக்குவரத்து பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
பொள்ளாச்சி - கோட்டூர் ரோட்டில், இரு ஆண்டுகளாக ரயில்வே மேம்பாலம் கட்டும் பணி நடக்கிறது. இப்பணிக்காக, பொள்ளாச்சி - வால்பாறை செல்லும் வாகனங்கள், பத்ரகாளியம்மன் கோவில் வீதி வழியாக மாற்று பாதையில் இயக்கப்படுகின்றன. வால்பாறை - பொள்ளாச்சி வரை இயக்கப்படும், பஸ், லாரி உள்ளிட்ட கன ரக வாகனங்கள், மோதிராபுரம் ரோடு வழியாக மீன்கரை ரோட்டை அடைந்து பொள்ளாச்சி வரை இயக்கப்படுகிறது. மாற்று வழியான பத்ரகாளியம்மன் கோவில் வீதி ரோடும், மோதிராபுரம் ரோடும் குண்டும், குழியுமாக உள்ளது. இதில், பத்ரகாளியம்மன் கோவில் ரோட்டில் அடிக்கடி 'பேட்ஜ் ஒர்க்' செய்வதால், போக்குவரத்து ஓரளவு பயன்படுத்தும் நிலையில் உள்ளது. ஆனால், மோதிராபுரம் ரோடு சீரமைத்தும் இரண்டொரு நாட்கள் வரை மட்டுமே தாக்கு பிடித்தது. தற்போது, இந்த ரோடு மிகவும் மோசமடைந்துள்ளதால், அரசு பஸ் டிரைவர்கள் தவிப்புக்குள்ளாகின்றனர். இந்த ரோட்டை உடனடியாக சீரமைக்க வலியுறுத்தி, போக்குவரத்து கழகம் சார்பில் வருவாய் கோட்டாட்சியருக்கு மனு அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மோதிராபுரம் ரோட்டை சீரமைக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் உடுமலை எம்.எல்.ஏ., பொள்ளாச்சி ஜெயராமனிடம் முறையிட்டனர். மோதிராபுரம் ரோட்டை ஆய்வு செய்த எம்.எல்.ஏ., ஜெயராமன், எம்.பி., சுகுமார், நெடுஞ்சாலைத்துறை (திட்டங்கள்) அலுவலர் மனோகரன் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர். 'போக்குவரத்துக்கு அதிகளவில் பயன்படுத்தும் இந்த ரோட்டை உடனடியாக சீரமைக்க வேண்டும்' என, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம், எம்.எல்.ஏ., தெரிவித்தார்.