ADDED : செப் 20, 2011 11:43 PM
பொள்ளாச்சி : குறுமைய அளவிலான விளையாட்டு போட்டிகளில் கோட்டூர்
அங்கலக்குறிச்சி விக்னேஸ்வரா பள்ளி மாணவர்கள் அதிக இடங்களை கைப்பற்றினர்.
பொள்ளாச்சி கல்வி மாவட்ட குறுமைய அளவில் பள்ளிகளுக்கு இடையேயான விளையாட்டு
போட்டிகள் ஆனைமலை அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. விளையாட்டு
போட்டிகளில் கோட்டூர், அங்கலக்குறிச்சி விக்னேஸ்வரா மெட்ரிக்
மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் வெற்றி பெற்றுள்ளனர். மிக மூத்தோருக்கான
வளை பந்தாட்டத்தில் இரண்டாம் இடத்தையும், மூத்தோருக்கான இறகு பந்து
போட்டியில் ஒற்றையர் பிரிவில் மாணவி தேவதர்ஷினி இரண்டாம் இடத்தையும்,
மூத்தோருக்கான கேரம் போட்டியில் இரட்டையர் பிரிவில் மாணவிகள் பபிதா, ரம்யா
ஆகியோர் இரண்டாம் இடத்தையும், மூத்தோருக்கான பெண்கள் எறிபந்து போட்டியில்
இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளனர். மூத்தோருக்கான ஆண்கள் பிரிவில்,
எறிபந்து போட்டியில் முதலிடத்தையும் பிடித்துள்ளனர். வெற்றி பெற்ற மாணவ,
மாணவிகள் வருவாய் மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளில் விளையாட தகுதி
பெற்றுள்ளனர். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை பள்ளி தலைவர்
கந்தசாமி, பள்ளி தாளாளர் சிவகணேசன், பள்ளி செயலாளர் காயத்ரி சிவகணேசன்,
பள்ளி முதல்வர் மகாலட்சுமி ஆகியோர் பாராட்டினர்.
பொள்ளாச்சி கல்வி மாவட்ட அளவிலான குறுமைய தடகள போட்டிகள் பொள்ளாச்சியில்
நடந்தது. போட்டியில், பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள்
பங்கேற்றனர். இதில், பொள்ளாச்சி சுபாஷ் வித்யா மந்திர் மெட்ரிக் பள்ளி
மாணவர் செந்தில்குமார் 200 மீட்டர் ஓட்ட போட்டியில் முதலிடத்தையும், 400
மீட்டர் ஓட்ட போட்டியில் மாணவர் மணிகண்டன் இரண்டாம் இடமும், அதே பிரிவில்
மாணவர் அஸ்வின் மூன்றாமிடமும் பிடித்தனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு
பள்ளி நிர்வாகத்தினர் பாராட்டு தெரிவித்தனர்.