/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவை ரயில்வே ஸ்டேஷனில் வசதிகள் வேண்டும்! கேட்கிறது ரயில் பயனர்கள் சங்கம்
/
கோவை ரயில்வே ஸ்டேஷனில் வசதிகள் வேண்டும்! கேட்கிறது ரயில் பயனர்கள் சங்கம்
கோவை ரயில்வே ஸ்டேஷனில் வசதிகள் வேண்டும்! கேட்கிறது ரயில் பயனர்கள் சங்கம்
கோவை ரயில்வே ஸ்டேஷனில் வசதிகள் வேண்டும்! கேட்கிறது ரயில் பயனர்கள் சங்கம்
ADDED : டிச 24, 2024 11:44 PM

கோவை : சரக்கு மற்றும் பயணிகள் ரயில் போக்குவரத்து வருவாயில், கோவை ரயில்வே ஸ்டேஷனுக்கு தேசிய அளவில், 34வது இடம் கிடைத்துள்ள நிலையில், பயணிகளுக்கான வசதியை அதிகரிக்க கோரிக்கை விடப்பட்டுள்ளது.
இந்திய ரயில்வே மிகப்பெரிய ரயில்வே நெட்வொர்க்கை கொண்டுள்ளது. ஆண்டுக்கு, 500 கோடிக்கும் அதிகமான மக்கள் ரயில்களை பயன்படுத்துகின்றனர். ஆண்டுக்கு, 35 கோடி டன் சரக்கு போக்குவரத்தும் கையாளப்படுகிறது.
சரக்கு மற்றும் பயணிகள் இயக்கத்தின் வாயிலாக, 2023 - 24ம் ஆண்டில், ரூ.2.56 லட்சம் கோடி வருவாய் கிடைத்ததாக கடந்த, ஏப்., மாதம் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தற்போது, நாட்டில் அதிக வருவாய் ஈட்டும் ரயில்வே ஸ்டேஷன்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில், சிறந்த 100 வருவாய் ஈட்டும் நிலையங்களில், தெற்கு ரயில்வேயின் பல்வேறு ரயில்வே ஸ்டேஷன்கள், 100 இடங்களுக்குள் வந்துள்ளன. 34வது இடத்தில் உள்ள கோவை ரயில்வே ஸ்டேஷனில், பயணிகளுக்கான வசதியை அதிகரிக்க கோரிக்கை வலுத்துள்ளது.
போத்தனுார் ரயில் பயனர்கள் சங்க பொதுச் செயலாளர் சுப்ரமணியன் கூறியதாவது:
கோவைக்கு புதிய ரயில்களை இயக்க வேண்டும் எனில், பராமரிப்பு மையம் இருக்க வேண்டும். பராமரிப்பு மையம் இல்லாததால், புது ரயில்களை இயக்க முடியாத சூழல் ஏற்படுகிறது. இதற்காக புது பிட்லைன்களை ஏற்படுத்த கோரிக்கை விடப்பட்டுள்ளது.
கோவையில் இரண்டு பிட்லைன்கள் உள்ளன. அங்கு போதிய இடவசதி இல்லை. அதனால் போத்தனுாரில், இரு பிட்லைன்களை மட்டும் ஏற்படுத்த கோரிக்கை விடப்பட்டுள்ளது.
பராமரிப்புக்குப் பின், அந்த ரயில்களை நிறுத்த குறைந்தபட்சம் நான்கு 'ஸ்டேப்லிங் லைன்' ஏற்படுத்த வேண்டும். இதை செய்தாலே ஏராளமான புதிய ரயில்களை இயக்க முடியும்.
தற்போது பல ரயில் பெட்டிகள், எல்.எச்.பி., பெட்டிகளாக மாற்றப்பட்டுள்ளன. ஏற்கனவே இருந்த ஐ.சி.எப்., பெட்டிகளை கொண்டு, புதிய ரயில்கள் இயக்க வசதி உள்ளது. இதைக்கருத்தில் கொண்டு வசதிகளை மேம்படுத்த வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.
'கோவையை தலைமையிடமாக கொண்ட, புதிய ரயில்வே கோட்டத்தை ஏற்படுத்த வேண்டும்' என, கொங்கு குளோபல் போரம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

