/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நலவாரியத்தில் 'கிக்' தொழிலாளர்கள் பதிவு செய்வதில் கோவைக்கு முதலிடம்! பணிபுரியும் இடத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்த முகாம்
/
நலவாரியத்தில் 'கிக்' தொழிலாளர்கள் பதிவு செய்வதில் கோவைக்கு முதலிடம்! பணிபுரியும் இடத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்த முகாம்
நலவாரியத்தில் 'கிக்' தொழிலாளர்கள் பதிவு செய்வதில் கோவைக்கு முதலிடம்! பணிபுரியும் இடத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்த முகாம்
நலவாரியத்தில் 'கிக்' தொழிலாளர்கள் பதிவு செய்வதில் கோவைக்கு முதலிடம்! பணிபுரியும் இடத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்த முகாம்
ADDED : மே 26, 2025 11:21 PM

மேட்டுப்பாளையம் : உணவு டெலிவரி மற்றும் இணையம் சார்ந்த பொருட்கள் டெலிவரி செய்யும், 'கிக்' தொழிலாளர்கள், நல வாரியத்தில் பதிவு செய்வது அதிகரித்துள்ளது. தமிழகத்திலேயே அதிகப்படியாக கோவை மாவட்டத்தில் தற்போது வரை 1010 'கிக்' தொழிலாளர்கள் நலவாரியத்தில் இணைந்துள்ளனர்.
வாழ்க்கை பாதையில் வேகமாக ஓடிக்கொண்டிருக்கும் மக்கள், உணவு மற்றும் அன்றாட வாழ்க்கைக்கு தேவையான பொருட்களை, ஆன்லைன் வாயிலாக ஆர்டர் செய்து வாங்குவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் இணையவழி விற்பனை, வர்த்தக சேவை விற்பனை தொழில் வேகமாக வளர்ந்து, பல ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பும் கிடைத்து வருகிறது.
இந்த வகையான இணையம் சார்ந்த டெலிவரி தொழிலாளர்கள், அமைப்புசாரா தொழிலாளர்களாக கருதப்பட்டு, 'கிக்' (ஜிஐஜி) தொழிலாளர்கள் என அழைக்கப்படுகின்றனர். இவர்களின் நலன்களை பாதுகாக்கும் வகையில், தமிழக அரசால் கடந்த 2023ம் ஆண்டு 'கிக்' தொழிலாளர்களுக்கு நலவாரியம் அமைக்கப்பட்டது. அப்போதைய காலகட்டத்தில் நலவாரியத்தில் இணைய தொழிலாளர்கள் பெரிதும் ஆர்வம் காட்டவில்லை.
தற்போது கோவை மாவட்ட கலெக்டர் பவன்குமார் இத்துறை தொழிலாளர்கள் மீது அக்கறை கொண்டு, நேரடியாக 'கிக்' தொழிலாளர்கள் பணிபுரியும் தலைமையிடங்களில் பேசி நலவாரிய பலன்கள் கிடைக்க, பதிவு செய்ய விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
மேலும், தொழிலாளர் நலத்துறை அதிகாரிகளும் 'கிக்' தொழிலாளர்கள் பணி புரியும் இடங்களுக்கு நேரில் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தி அங்கேயே பதிவு செய்து வருகின்றனர்.
இதுகுறித்து, கோவை தொழிலாளர் உதவி கமிஷனர் (சமூக பாதுகாப்பு திட்டம்) (பொறுப்பு) அதிகாரி சுபாஷ் சந்திரன் தெரிவித்ததாவது:-
அமைப்புசாரா தொழிலாளர்கள் நலவாரியத்தில் இணையம் சார்ந்த 'கிக்' தொழிலாளர்கள் பதிவு செய்ய சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது. அதிகாரிகளும் நேரில் சென்று பதிவு செய்கின்றனர். இதுவரை சுமார் 1010 தொழிலாளர்கள் பதிவு செய்துள்ளனர். தமிழகத்தில் நம் மாவட்டத்தில் தான் அதிகம் பதிவு செய்துள்ளனர்.
இவ்வாரியத்தில் 18 வயது முதல் 60 வயது வரையிலான தொழிலாளர்கள் இணையலாம். பதிவு செய்யும் தொழிலாளர்களுக்கு கல்வி, திருமணம். இயற்கை மரணம் மற்றும் ஓய்வூதியம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும்.
தற்போது, நல வாரியத்தில் பதிவு செய்ய தொழிலாளர்கள் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.