/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவை டவுன்ஹால் தாமஸ் வீதியில் நகர முடியவில்லை! நெரிசலுக்கு எப்போது தீர்வு?
/
கோவை டவுன்ஹால் தாமஸ் வீதியில் நகர முடியவில்லை! நெரிசலுக்கு எப்போது தீர்வு?
கோவை டவுன்ஹால் தாமஸ் வீதியில் நகர முடியவில்லை! நெரிசலுக்கு எப்போது தீர்வு?
கோவை டவுன்ஹால் தாமஸ் வீதியில் நகர முடியவில்லை! நெரிசலுக்கு எப்போது தீர்வு?
ADDED : பிப் 15, 2024 12:26 AM

கோவை : டவுன்ஹால் அருகே தாமஸ் வீதியில் 'பார்க்கிங்' வசதி இருந்தும், குறுகிய ரோட்டில் கடைகள் மற்றும் வாகனங்களின் ஆக்கிரமிப்பு காரணமாக, நெரிசல் பிரச்னை அதிகரித்து வருகிறது. இதனால், இங்கு பொருட்கள் வாங்க வருவோர் அவஸ்தைப்படுகின்றனர். வியாபாரம் இதனால் குறைவதால், வாகன நெரிசல் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண, வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மாநகராட்சி மத்திய மண்டலம், 81வது வார்டுக்கு உட்பட்ட டவுன்ஹால், ராஜ வீதி, தாமஸ் வீதி, ஆர்.ஜி.வீதி, ஒப்பணக்கார வீதி உள்ளிட்ட இடங்களில் ஜவுளிக்கடைகள், ஓட்டல்கள் அதிகம் உள்ளன. இதனால், இப்பகுதி பரபரப்பாகவே இருக்கும்.
வாகனங்களால் போக்குவரத்து நெரிசலும் அதிகரிக்கும். தாமஸ் வீதி, ஆர்.ஜி.வீதியில் மொத்த விலை மளிகை கடைகள், குழந்தைகளுக்கான விளையாட்டு பொருட்கள் கடைகள் அதிகம் உள்ளதால், தினமும் வியாபாரம் களைகட்டுகிறது. பண்டிகை காலங்களில் கேட்கவே வேண்டாம்.
ரோடும் குறுகியதாக இருப்பதால், தாமஸ் வீதியில் கட்டண முறையில் இரண்டு, நான்கு சக்கர வாகன நிறுத்தும் வசதியும் உள்ளது. ஆனால், ராஜ வீதியில் இருந்தும், ஒப்பணக்கார வீதியில் இருந்து தாமஸ் வீதிக்குள் எதிரெதிரே நுழையும் வாகனங்களால், நெரிசல் பிரச்னை தலைதுாக்கி வருகிறது.
வியாபாரிகள் சிலர் கூறியதாவது:
ராஜ வீதியில் இருந்து தாமஸ் வீதிக்கு வடக்கு நோக்கியும், ஒப்பணக்கார வீதியில் இருந்து ராஜ வீதிக்கு தெற்கு நோக்கியும், வாகனங்கள் வரிசை கட்டி வருகின்றன. போதாக்குறைக்கு வியாபாரிகள் சிலரே பொருட்களையும் ரோட்டில் வைத்து ஆக்கிரமிக்கின்றனர்.
இதனால், வாகன நிறுத்தத்துக்கு செல்லும் வாகனங்களும் திணறுகின்றன. 'நோ பார்க்கிங்' பலகைகளையும் அகற்றி விடுகின்றனர். முன்பெல்லாம் இங்கு வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமானோர், மொத்தமாக பொருட்கள் வாங்க வருவர்.
இங்குள்ள மிக மோசமான போக்குவரத்து நெரிசலை பார்த்து, அவர்களில் பலர் தற்போது வருவதில்லை. இது, இங்குள்ள வியாபாரிகளுக்கு மட்டும் ஏற்படும் வருவாய் இழப்பல்ல; அரசுக்கும் வரி இழப்பு ஏற்படுகிறது.
நெரிசல் பிரச்னைக்கு தீர்வு காண, ராஜ வீதியில் இருந்து தாமஸ் வீதி வழியாக ஒப்பணக்கார வீதி செல்லும் வகையில், ஒருவழிப்பாதை திட்டம் செயல்படுத்த வேண்டும்; எதிரே வாகனங்களை அனுமதிக்க கூடாது.
கடை ஆக்கிரமிப்புகளையும் அகற்ற வேண்டும். மாநகராட்சி நிர்வாகமும், போலீசாரும் இணைந்து இப்பிரச்னைக்கு தீர்வு கண்டால் நெரிசலும் குறையும், வியாபாரமும் நன்றாக இருக்கும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

