ADDED : நவ 27, 2024 10:14 PM
கோவை; கோவை விழாவின் ஒரு பகுதியாக நடந்த ஒரு நாள் - கலெக்டர், போலீஸ் கமிஷனர், மாநகராட்சி கமிஷனர் போட்டிகளில் மாணவர்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.
கோவையின் பெருமைகளை வெளிப்படுத்தும் விதமாக கோவை விழா ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. கோவை விழாவின், 17வது பதிப்பை முன்னிட்டு பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
இதன் ஒரு பகுதியாக நேற்று, சங்கர் ஐஏஎஸ் அகாடமியின் 'ஒரு நாள் - கலெக்டர், போலீஸ் கமிஷனர், மாநகராட்சி கமிஷனர்' போட்டிகள் நடந்தன. மாநில அளவில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு, -'ஏ'-(14 - 18 வயது), 'பி'(19 - 23 வயது) மற்றும் 'சி' (24 - 28 வயது) என, மூன்று பிரிவுகளில் போட்டிகள் நடந்தன.
தெருநாய் தொல்லை, குழந்தைகளுக்கான பாதுகாப்பு, போதை பழக்கம், தொடர்பான பிரச்னைகள் ஆகிய மாவட்ட நிர்வாகம், போலீசார், மாநகராட்சி அதிகாரிகளால் கண்டறியப்பட்ட பிரச்னைகளுக்கு போட்டியாளர்கள் தனித்துவமான தீர்வுகளை வழங்க அறிவுறுத்தப்பட்டது.
இந்தாண்டு போட்டியில் பங்கேற்க, 450 மாணவர்கள் பதிவு செய்தனர். இறுதிப் போட்டிக்கு, 35 மாணவர்கள் தகுதி பெற்றனர். இவர்களில், தருமபுரி, செந்தில் பப்ளிக் பள்ளி பிளஸ், 1 மாணவர் இட்ரிஸ் ஷீக் தாவூத், கோவை குமரகுரு கல்லூரியை சேர்ந்த, பி.டெக்., மாணவி பூர்ணிமா, மற்றும் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பல் மருத்துவக் கல்லூரி மாணவர் ஹரி கோகுல் ஆகியோர் முறையே வெற்றி பெற்றனர்.
வெற்றி பெற்றவர்கள் கோவை கலெக்டர், மாநகர போலீஸ் கமிஷனர், மாநகராட்சி கமிஷனர் ஆகியோரின் பணிகள் குறித்து அவர்களுடன் சென்று அறிந்து கொள்வார்கள்.
வெற்றி பெற்றவர்களுக்கு கோவை மாநகர போலீஸ் கமிஷ்னர் பாலகிருஷ்ணன் பரிசுகள், சான்றிதழ்களை வழங்கினார்.
கோவை சங்கர் ஐ.ஏ.எஸ்., அகாடமி தலைவர் அருண் செந்தில்நாதன், தலைமை செயல் அலுவலர் யாஸ்மி, மற்றும் யங் இந்தியன்ஸ் அமைப்பின் உறுப்பினர்கள் கெஸிக்கா, நீல் கிக்கானி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.