/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவை மகளிர் கோர்ட் நீதிபதி இடமாற்றம்
/
கோவை மகளிர் கோர்ட் நீதிபதி இடமாற்றம்
ADDED : ஏப் 29, 2025 06:15 AM
கோவை:
தமிழகம் முழுவதும், 77 நீதிபதிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர். இதற்கான அறிவிப்பை சென்னை ஐகோர்ட் பதிவாளர் நேற்று வெளியிட்டுள்ளார். இதில், கோவையில் பணியாற்றும் நான்கு நீதிபதிகள் இடம்பெற்றுள்ளனர்.
கோவை மகளிர் கோர்ட் நீதிபதி நந்தினிதேவி, கரூர் குடும்ப நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டார். இதே போல, கோவை மூன்றாவது கூடுதல் சார்பு நீதிபதி பத்மா, சென்னை போக்சோ சிறப்பு கோர்ட்டிற்கும், கோவை நான்காவது கூடுதல் செஷன்ஸ் நீதிபதி சஞ்சீவிபாஸ்கர், கோவை கூடுதல் தொழிலாளர் கோர்ட்டிற்கும், கோவை தொழிலாளர் கோர்ட் நீதிபதி அருணாசலம், சென்னை முதலாவது கூடுதல் தொழிலாளர் கோர்ட்டிற்கும் மாற்றப்பட்டனர்.
கோவை மகளிர் கோர்ட் நீதிபதி நந்தினிதேவி, பொள்ளாச்சியில் நடந்த கூட்டு பாலியல் பலாத்கார வழக்கை, விசாரணை நடத்தி வந்தார்.
இந்த வழக்கில் விசாரணை முடிந்து, தீர்ப்பு தேதி நேற்று வெளியான சில மணி நேரத்தில், இடமாற்ற பட்டியலில், நீதிபதி நந்தினிதேவி பெயரும் இடம்பெற்றிருந்தது. ஆனால், புதிய இடத்தில் பணியில் சேர்வது தொடர்பான அறிவிப்பு, பின்னர் வெளியிடப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. குடும்ப நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளதால், அதற்கு தனி உத்தரவு, நீதிபதிக்கு வந்த பிறகே, புதிய இடத்தில் பணியில் சேர முடியும்.
இதற்கிடையில், மறு உத்தரவு வரும் வரை, நீதிபதி நந்தினிதேவி அதே கோர்ட்டில் பணிபுரிவார் என்று, சென்னை ஐகோர்ட் பதிவாளர் அலுவலகத்தில் இருந்து, மகளிர் கோர்ட்டிற்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. எனவே, நீதிபதி நந்தினி தேவி, பொள்ளாச்சி வழக்கில் தீர்ப்பு அளித்த பிறகே, இடமாறுதலாகி செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

