/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இளம்பெண்ணை ஏமாற்றிய கோவை வாலிபருக்கு சிறை
/
இளம்பெண்ணை ஏமாற்றிய கோவை வாலிபருக்கு சிறை
ADDED : ஏப் 23, 2025 06:35 AM

கோவை : இளம்பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி, நகை, பணம் பெற்று ஏமாற்றிய வாலிபரை, போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
காரமடையை சேர்ந்த, 24 வயது பெண்; கோவை டைடல் பார்க்கில் உள்ள ஐ.டி., நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கு, பூ மார்க்கெட் பகுதியை சேர்ந்த பாக்ய அருண், 29 என்பவருடன் 'இன்ஸ்டாகிராம்' வாயிலாக பழக்கம் ஏற்பட்டது.
பாக்ய அருண், வெளிநாட்டு இன நாய்களை வாங்கி விற்கும் தொழில் செய்து வருவதாக அப்பெண்ணிடம் கூறியுள்ளார். சில நாட்கள் பேசிய பின், அப்பெண்ணை காதலிப்பதாக தெரிவித்துள்ளார். காதலிப்பது குறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்து விட்டதாகவும், திருமணம் செய்து கொள்வதாகவும் ஆசை வார்த்தை கூறியுள்ளார். அதை நம்பி, பழகியுள்ளார். பாக்ய அருண் அவ்வப்போது, அப்பெண்ணிடம் இருந்து பணம் பெற்றிருக்கிறார். தொழிலை விரிவுபடுத்த வேண்டும் எனக்கூறி, 8.5 சவரன் நகை மற்றும் ரூ.3.60 லட்சம் பணம் பெற்றுள்ளார். பணம் பெற்று சிறிது நாட்களுக்கு பின், பெண்ணிடம் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார்.
பாக்ய அருணுக்கு மொபைலில் அழைத்தபோதும் எடுக்காமல் தவிர்த்துள்ளார். கடந்த மார்ச் மாதம் காந்திபுரம் பஸ் ஸ்டாண்டில் பாக்ய அருணை அப்பெண் பார்த்தபோது, 'தனது தந்தைக்கு உடல்நலம் சரியில்லை' என கூறி, கொடுத்த பணத்தை அப்பெண் திருப்பிக் கேட்டுள்ளார்.
ஆத்திரமடைந்த பாக்ய அருண், பொது இடத்தில் வைத்து தகாத வார்த்தைகளால் திட்டியிருக்கிறார். இதுபோல், பல பெண்களிடம் பணம் பெற்று ஏமாற்றியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். சம்பவம் குறித்து பீளமேடு போலீசில் கொடுத்த புகாரை தொடர்ந்து, பாக்ய அருணை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

