கோவையின் முதல் தபால் நிலையம் : 145ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது
கோவையின் முதல் தபால் நிலையம் : 145ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது
ADDED : செப் 30, 2026 11:13 PM

கோவை: கோவையின் முதல் தபால் நிலையமான 'போத்தனுார் போஸ்ட் ஆபிஸ்' 1882ம் ஆண்டு அக்., 1ம் தேதி பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் துவங்கப்பட்டது.
இன்று 145ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இந்த தபால் நிலையம் செட்டிபாளையம், வெள்ளலுார் வரை பட்டுவாடா எல்லையை கொண்டிருந்தது.
ஒரு போஸ்ட் மாஸ்டர், கிளர்க் இருவர், தபால்காரர் மூவர், தந்தி பட்டுவாடாவுக்கு ஒருவர் இருந்தனர். இன்று ஒரு போஸ்ட் மாஸ்டர், நான்கு கிளார்க்குகள், ஆறு தபால்காரர்கள், ஒரு பன்முக பணியாளர் என சேவை விரிவடைந்துள்ளது என்கிறார், கோவைப்புதுாரை சேர்ந்த முன்னாள் போஸ்ட் மாஸ்டர் ஹரிஹரன்.
''போத்தனுார் ரயில்வே ஸ்டேஷன் 1862ல் துவங்கப்பட்டு 20 ஆண்டுகளுக்கு பிறகு போத்தனுார் தபால் நிலையம் ஆரம்பிக்கப்பட்டது. நாட்டில் முதல் தபால் நிலையம் 1774 மார்ச் 31ம் தேதி கொல்கத்தாவில் துவங்கப்பட்டது. அதன்பிறகு, போத்தனுாரில்தான் துவங்கப்பட்டது.
வெளிநாடுகளில் நிலவும் தட்பவெப்பநிலை போத்தனுாரில் நிலவியது. இதுவே ஆங்கிலேயர்கள் தபால் நிலையம் துவங்க முக்கிய காரணம்.
பெரும்பாலும் ஆங்கிலோ- இந்தியர்கள் இங்கு குடியேறினர். ரயில்வே 'எஸ் அண்ட் டி' பணிமனையில் 1,000க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்தனர்.
இதனால் போத்தனுார் தபால் நிலையத்தில் இருந்து பிரதான சேவை இருந்தது. முதன்மையான இந்த தபால் நிலையத்தில் முதல் தபால் பெட்டி வந்திறங்கியது; தபால் ஊழியர்களுக்கென்று குடியிருப்பும் கட்டப்பட்டது,'' என்கிறார்.
பழங்கால தபால் அலுவலக கட்டடம், இன்று புதுப்பிக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. விரைவு தபால், மணி ஆர்டர், பார்சல், ஆதார் என அனைத்து சேவைகளும் வழங்கப்பட்டு வருகின்றன.
'போத்தனுார் தபால் நிலையம்' என்ற திரைப்படமும் வரலாற்றை நினைவுகூறும் வகையில் எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
