ADDED : ஜன 15, 2024 11:17 PM
பெரியநாயக்கன்பாளையத்தில் இன்று கும்பாபிஷேக விழா காணும் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் திருக்கோவில், கோவையின் ஒரு புதிய அடையாளமாக மாறுகிறது.
கோவையிலிருந்து மேட்டுப்பாளையம் செல்லும் வழியில், 20 கி.மீ., தொலைவில் பெரியநாயக்கன்பாளையத்தில் அமைந்துள்ளது, ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயா.
இந்நிறுவனம், 18 கல்வி நிறுவனங்களோடு செயல்பட்டு வருகிறது. ஆயிரக்கணக்கான மாணவ மாணவிகளுடன், சிறந்த கல்வி நிறுவனமாக செயல்பட்டு வருகிறது. இங்கு பிரம்மாண்டமான அளவில், ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் திருக்கோவில் கட்டப்பட்டுள்ளது. இது கோவைக்கு ஒரு புதிய அடையாளமாக எதிர்காலத்தில் விளங்கும் என்பது சந்தேகம் இல்லை.
கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணருக்கு இவ்வளவு பிரமாண்டமான கோவில் இதுவரை அமைந்தது இல்லை. எதிர்காலத்தில் பெரியநாயக்கன்பாளையம் வட்டாரம் மட்டுமல்லாமல், கோவை மாவட்ட முழுமைக்கும், ஆன்மிக தேவைகளை இக்கோவில் பூர்த்தி செய்யும்.
இங்கு தினமும் காலை, மாலை இருவேளையும் நடக்கும் பிரார்த்தனைகளிலும், பஜனைகளிலும் இப்பகுதி மக்களும், கோவை மாவட்ட மக்களும் கலந்து கொள்ளலாம்.