/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஒருங்கிணைந்த நீதிமன்ற பணிகளை கிடப்பில் போட்டு... ஒன்றரை ஆண்டுகளாச்சு!கூடுதல் நிதிக்கு அழுத்தம் கொடுக்கும் வக்கீல்கள் சங்கம்
/
ஒருங்கிணைந்த நீதிமன்ற பணிகளை கிடப்பில் போட்டு... ஒன்றரை ஆண்டுகளாச்சு!கூடுதல் நிதிக்கு அழுத்தம் கொடுக்கும் வக்கீல்கள் சங்கம்
ஒருங்கிணைந்த நீதிமன்ற பணிகளை கிடப்பில் போட்டு... ஒன்றரை ஆண்டுகளாச்சு!கூடுதல் நிதிக்கு அழுத்தம் கொடுக்கும் வக்கீல்கள் சங்கம்
ஒருங்கிணைந்த நீதிமன்ற பணிகளை கிடப்பில் போட்டு... ஒன்றரை ஆண்டுகளாச்சு!கூடுதல் நிதிக்கு அழுத்தம் கொடுக்கும் வக்கீல்கள் சங்கம்
ADDED : மார் 01, 2024 11:15 PM

பொள்ளாச்சி, மார்ச் 2- பொள்ளாச்சியில், ஒருங்கிணைந்த நீதிமன்றம் கட்டுமானப்பணிக்கு கூடுதல் நிதி ஒதுக்காததால், கடந்த, ஒன்றரை ஆண்டுகளாக பணிகள் பாதியிலேயே நிற்கிறது. பணியை விரைந்து முடிக்க நிதியை ஒதுக்க வேண்டும் என, பொள்ளாச்சி வக்கீல்கள் சங்கம் சார்பில், முதன்மை செயலருக்கு மனு அனுப்பி வலியுறுத்தி உள்ளனர்.
பொள்ளாச்சியில், அனைத்து கோர்ட்களும் ஒரே வளாகத்தில் செயல்படும் வகையில், ஒருங்கிணைந்த கோர்ட் வளாகம் அமைக்க வேண்டும் என, அரசுக்கும், சென்னை உயர்நீதி மன்றத்துக்கும் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
கோரிக்கையை பரிசீலித்த தமிழக அரசு, கடந்த 2016ல், கோவை ரோடு, அண்ணா நகர் மேடு பகுதியில், ஒருங்கிணைந்த கோர்ட் வளாகம் அமைக்க, நகராட்சிக்கு சொந்தமான நிலம், 3.25 ஏக்கர் ஒப்படைக்கப்பட்டது.
கோர்ட் வளாகம் அமையும் இடத்தை, மாவட்ட நீதிபதி பார்வையிட்டு, நில அளவுகளை இறுதி செய்து, ஐகோர்ட் நிர்வாகத்துக்கு அனுப்பி வைத்தார். அதன்பின், கோர்ட் வளாக அமைப்பு திட்டமிடலில் பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு, இறுதி செய்யப்பட்டுள்ளது.
இறுதி செய்யப்பட்ட வரைபடத்தில், 10 விசாரணை அறைகள், நீதிபதிகள், அரசு வக்கீல்கள் அறைகள், வக்கீல்கள் சங்க அறை அமைக்க திட்டமிடப்பட்டது.அதே வளாகத்தில், கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிமன்றமும், கூடுதல் சார்பு நீதிமன்றமும் அமைக்கவும், உயர்நீதிமன்றம் அனுமதி அளித்தது. நீதிபதிகள் குடியிருப்புகளும் கட்டப்படுகிறது. மொத்தம், 35 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டுமான பணிகள் நடைபெற்றன.
இப்பணிகளை தொடர்ந்து, சுற்றுச்சுவர் உள்ளிட்ட வசதிகள் மேம்படுத்தும் வகையில் கூடுதலாக, 15 கோடி ரூபாய் தேவை என, பொதுப்பணித்துறை வாயிலாக, உயர்நீதிமன்றம் நீதிபதிக்கு அனுப்பப்பட்டது. அங்கு இருந்து தமிழக அரசுக்கு நிதி ஒதுக்க கோரி கடிதம் வழங்கப்பட்டது. ஒன்றரை ஆண்டுகள் ஆகியும் இதுவரை நிதி ஒதுக்கப்படாததால், பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில், பொள்ளாச்சி வக்கீல்கள் சங்கம் சார்பில், நிதி ஒதுக்க கோரி தமிழக முதன்மை செயலருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
பொள்ளாச்சி வக்கீல்கள் சங்க தலைவர் துரை கூறியதாவது:
ஒருங்கிணைந்த நீதிமன்றம், 35 கோடி ரூபாய் செலவில் கட்டப்படுகிறது. புதிய கட்டடத்தில் சுற்றுச்சுவர், ரோடு மற்றும் இருக்கை வசதிகள், மேம்படுத்தும் பணிகள் உள்ளன. இதற்காக, 15 கோடி ரூபாய் நிதி தேவைப்படுவதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிதியை வழங்கி, பணிகளை முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தும், இதுவரை நிதி ஒதுக்கவில்லை. தற்போது செயல்படும் கோர்ட்களில் இடநெருக்கடி உள்ளது. ரோடு விரிவாக்கப்பணிகளுக்காக கோர்ட் வளாகம் எடுக்கப்பட்டதால் சிரமமாக உள்ளது.
ஒன்றரை ஆண்டுகளாகியும் நிதி ஒதுக்காததால் பணிகள் தொய்வடைந்துள்ளன. அரசு நிதி ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தி, முதன்மை செயலருக்கு மனு அனுப்பப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.

