/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மக்களுக்கான சமுதாயக்கூடத்தை மாற்றக்கூடாது தொண்டாமுத்துார் பேரூராட்சி நிர்வாகம் மீது மக்கள் அதிருப்தி

ADDED : பிப் 23, 2024 11:44 PM

தொண்டாமுத்தூர்;தொண்டாமுத்தூரில் உள்ள சமுதாயக்கூடத்தை பேரூராட்சி அலுவலகமாக மாற்ற, பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருவதால், பொதுமக்கள் அதிக வாடகைக்கு தனியார் மண்டபங்களுக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
தொண்டாமுத்தூரில், 2008ம் ஆண்டு, ஒரு ஹால் மற்றும் சமையலறையுடன் கூடிய சமுதாயக்கூடம் கட்டப்பட்டது. பேரூராட்சி நிர்வாகத்திற்கு, 3 ஆயிரம் ரூபாய் வாடகையாக செலுத்தி, பொதுமக்கள் தங்கள் வீட்டு விசேஷங்களை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், 2019ம் ஆண்டு, அ.தி.மு.க., ஆட்சிக்காலத்தில், இந்த சமுதாயக்கூட கட்டடத்தை ஒட்டி, கூடுதலாக 2 ஹால் கொண்ட கட்டடம் கட்டும் பணி துவங்கியது. பணிகள் முடியும் தருவாயில், ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.
கடந்த, 6 மாதங்களாக மீண்டும் பணி துவங்கி, 95 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளது. இதனையடுத்து, பேரூராட்சி நிர்வாகத்தினர், புதிய சமுதாய கூடத்தில், பல்வேறு முகாம்கள் நடத்தினர்.
இந்நிலையில், தொண்டாமுத்தூர், வ.உ.சி., வீதியில் செயல்பட்டு வரும் பேரூராட்சி அலுவலகத்தை, சமுதாயக்கூடத்திற்கு மாற்றம் செய்ய, பேரூராட்சி மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். மாற்றுவதற்கான பணிகள் நடந்து வருகின்றன.
இதனால், ஏழை மக்கள், தங்கள் வீட்டு சுபநிகழ்ச்சிகளை, தனியார் மண்டபங்களில் அதிக கட்டணம் செலுத்தி நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
தொண்டாமுத்தூர் பேரூராட்சி செயல் அலுவலர் பழனியப்பனிடம் கேட்டபோது, தற்போதுள்ள பேரூராட்சி அலுவலக கட்டடத்தில், இடப்பற்றாக்குறை உள்ளது. இதனால், உரிய அனுமதி பெற்றும், தீர்மானம் நிறைவேற்றியும், தற்காலிகமாக சமுதாயக்கூடத்தில் அலுவல் செயல்பட உள்ளது, என்றார்.
மக்கள் வசதிக்காக கட்டப்பட்ட சமுதாய கூடத்தை, தங்கள் விருப்பம் போல் மாற்றும் பேரூராட்சி நிர்வாகம் மீது, மக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.