மாணவி தாக்கப்பட்ட விவகாரம் :நடவடிக்கை கோரி புகார் மனு
மாணவி தாக்கப்பட்ட விவகாரம் :நடவடிக்கை கோரி புகார் மனு
ADDED : மார் 24, 2026 10:02 PM
கோவை: மாணவி தாக்கப்பட்ட விவகாரத்தில், மாணவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி, எஸ்.பி.,யிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம், சூலுார் அருகேயுள்ள பீடம்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளியில், பட்டணம், இந்திரா நகரை சேர்ந்த அருந்திய சமூகத்தை சேர்ந்த மாணவி, பிளஸ் 1 படித்து வருகிறார்.
அதே வகுப்பில் படிக்கும் மாணவர் ஒருவர், வணிக பாட விடைத்தாளில் அவருக்கு அளிக்கப்பட்ட மார்க்கை திருத்தி குளறுபடி செய்துள்ளார். இதை கவனித்த மாணவி, ஆசிரியரிடம் புகார் அளித்துள்ளார்.
ஆத்திரமடைந்த அந்த மாணவர், கடந்த 16ம் தேதி, பஸ் ஸ்டாண்டில் நின்று கொண்டிருந்த மாணவியை தாக்கி, ஜாதி பெயரை சொல்லி திட்டினார். படுகாயமடைந்த மாணவி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
மாணவியை தாக்கிய மாணவர் மீது போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். ஆனால் வழக்கு பதியவில்லை. இதனால் மாணவியின் பெற்றோர் மற்றும் தீண்டாமை ஒழிப்பு மற்றும் ஜனநாயக மாதர் சங்கத்தினர், நேற்று மாவட்ட எஸ்.பி., கார்த்திகேயனை சந்தித்து புகார் கொடுத்தனர்.
மாணவியை தாக்கிய மாணவர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
