/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குப்பையில் இருந்து உரம் உற்பத்தி; பேரூராட்சியில் துர்நாற்றத்திற்கு விடிவு
/
குப்பையில் இருந்து உரம் உற்பத்தி; பேரூராட்சியில் துர்நாற்றத்திற்கு விடிவு
குப்பையில் இருந்து உரம் உற்பத்தி; பேரூராட்சியில் துர்நாற்றத்திற்கு விடிவு
குப்பையில் இருந்து உரம் உற்பத்தி; பேரூராட்சியில் துர்நாற்றத்திற்கு விடிவு
ADDED : டிச 25, 2024 10:15 PM

அன்னுார்; அன்னுார் பேரூராட்சியில் 15வது வார்டில் தனியார் நிறுவனத்தின் ஒத்துழைப்போடு மக்கும் குப்பையில் இருந்து உரம் உற்பத்தி செய்யப்பட்டது.
15 வார்டுகளிலும் இது நடைமுறைப் படுத்தப்படும் என பேரூராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அன்னுார் பேரூராட்சியில் வளம் மீட்பு பூங்கா இல்லாததால் அன்னுார் குளத்தின் வடக்கு பகுதியில் குப்பை கொட்டப்படுகிறது.
இதற்கு சிலர் தீ வைப்பதால், அப்பகுதியில் புகைமூட்டம் ஏற்பட்டு, பொதுமக்கள் மூச்சு திணறலுக்கு ஆளாகின்றனர்.
இதைத் தொடர்ந்து அந்தந்த வார்டு குப்பைகளை அந்தந்த வார்டிலேயே தரம் பிரித்து உரம் தயாரிக்க பேரூராட்சி முடிவு செய்தது.
கடந்த மாதம் பேரூராட்சி கூட்டத்தில் ரீ கம்போஸ் ரீசைக்கிளிங் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது.
இதன்படி குப்பைகளை தரம் பிரித்து உரம் தயாரித்தல் உள்ளிட்ட பணிகளுக்கான வழிகாட்டுதல்களை அந்த நிறுவனம் செய்யும் என பேரூராட்சி தெரிவித்தது.
இதுகுறித்து இந்நிறுவன பிரதிநிதிகள் கூறுகையில், 'மக்கும் குப்பை இந்த குழியில் கொட்டப்பட்டு, நுண்ணுயிரி திரவமும், மாட்டுச் சாணமும் தெளிக்கப்படுகிறது.
சாதாரணமாக 60 நாளில் மக்கும் குப்பை இங்கு 30 முதல் 35 நாட்களுக்குள் மக்கி உரமாக மாறி விடுகிறது.
20 லிட்டர் நீரில், ஒரு லிட்டர் நுண்ணுயிர் திரவத்தை கலந்து தெளித்து வருகிறோம்.
இங்கு உற்பத்தியான உரத்தை விவசாயிகள் தாராளமாக பயன்படுத்தலாம்.
கடந்த மாதம் கொட்டப்பட்ட மக்கும் குப்பை தற்போது உரமாக மாறி உள்ளது. அடுத்த கட்டமாக 12 மற்றும் ஒன்பதாவது வார்டில் இத்திட்டம் துவக்கப்பட்டுள்ளது தொடர்ந்து, மற்ற 12 வார்டுகளிலும் திட்டங்கள் அமல்படுத்தப்படும்,' என்றனர்.
பேரூராட்சி தலைவர் பரமேஸ்வரன் கூறுகையில், முதல் கட்டமாக இங்கு உற்பத்தியான உரம் அருகில் உள்ள விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. கோவை கலெக்டரிடம் திடக்கழிவு மேலாண்மைக்கு இடம் தரும்படி கோரியுள்ளோம். என்றார்.
ஆய்வில், கவுன்சிலர் செல்வி பன்னீர் செல்வம், ஆய்வாளர் பிரதீப் குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

