/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நடைபாதை முழுக்க ஆக்கிரமிப்பு கடைகள் கண்டுகொள்ளாத அதிகாரிகளால் கவலை
/
நடைபாதை முழுக்க ஆக்கிரமிப்பு கடைகள் கண்டுகொள்ளாத அதிகாரிகளால் கவலை
நடைபாதை முழுக்க ஆக்கிரமிப்பு கடைகள் கண்டுகொள்ளாத அதிகாரிகளால் கவலை
நடைபாதை முழுக்க ஆக்கிரமிப்பு கடைகள் கண்டுகொள்ளாத அதிகாரிகளால் கவலை
ADDED : ஏப் 14, 2025 10:01 PM

வால்பாறை; வால்பாறை நகரில் ஆக்கிரமிப்புக்களை அகற்ற, அரசுத்துறை அதிகாரிகள் தொடர்ந்து தயக்கம் காட்டுவதால், மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
வால்பாறை நகரப்பகுதியில், அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லுாரிகள் அமைந்துள்ளன. இதனால், வாகன போக்குவரத்து அதிகம் உள்ளது. மேலும், சுற்றுலா பயணியரின் வாகனங்களும் அதிகளவில் இயக்கப்படுகின்றன.
இந்நிலையில், புதிய பஸ் ஸ்டாண்ட் முதல் காந்திசிலை வரையிலும், சாலையோர ஆக்கிரமிப்புக்கடைகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், வாகனங்களும் நிறுத்தப்படுவதால், நகரில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
கடந்த பிப்., மாதம் கண்துடைப்புக்காக, வால்பாறை நகரில் ஆக்கிரமிப்புக்கடைகளை நெடுஞ்சாலைத்துறையினர் அகற்றினர். அடுத்த சில நாட்களிலேயே நடைபாதையில் மீண்டும் ஆக்கிரமிப்புக்கடைகள் அமைக்கப்பட்டன.
இதுகுறித்து, மக்கள் கூறியதாவது:
வால்பாறையில் நடைபாதை முழுவதும் ஆக்கிரமிப்பு கடைகளாக உள்ளன. மக்கள் நடைபாதையில் செல்ல முடியாமல், ரோட்டில் நடந்து செல்கின்றனர். இதனால், போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படுவதால், மக்கள் ரோட்டில் நிம்மதியாக நடந்து கூட செல்ல முடியவில்லை.
நெடுஞ்சாலைத்துறை, வருவாய்த்துறை, நகராட்சி இணைந்து, ஆக்கிரமிப்பு கடைகளை முழுமையாக அகற்ற வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.
அரசியல் தலையீடு
வால்பாறையில், போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவது குறித்து, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, 'ஆக்கிரமிப்புக்கடைகளுக்கு நகராட்சி சார்பில் நாள் தோறும் வரி வசூல் செய்கின்றனர். இதனால், ஆக்கிரமிப்பு அகற்றுவது குறித்து இறுதி முடிவு எடுக்க வேண்டியது நகராட்சி அதிகாரிகள் தான்,' என்றனர்.
எது எப்படி இருந்தாலும், வால்பாறை நகரில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றுவதில் ஆளும்கட்சியினர் முட்டுக்கட்டையாக உள்ளனர் என்பது வெட்ட வெளிச்சமாக தெரிகிறது.