/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கழிப்பறைகளின் கான்கிரீட் மேற்கூரை 'தொபுக்கடீர்'
/
கழிப்பறைகளின் கான்கிரீட் மேற்கூரை 'தொபுக்கடீர்'
ADDED : ஜூலை 15, 2025 08:55 PM

கோவை; சிங்காநல்லுார் அடுத்த கள்ளிமடை பொது கழிப்பிடத்தில் அடுத்தடுத்து நான்கு அறைகளின் கான்கிரீட் மேற்கூரைகள் இடிந்து விழுந்தது, அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிங்காநல்லுார் அடுத்து மாநகராட்சி, 61வது கள்ளிமடையில், 2,000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இங்கு ஆண்கள், பெண்களுக்கென்று தனித்தனியே இரு இடங்களில், 20 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பொதுக் கழிப்பறைகள் உள்ளன.
காமாட்சியம்மன் கோவில் பின்புறம் ஆண்களுக்கு, 10 கழிவறைகளும், பெண்களுக்கு, 10க்கும் மேற்பட்ட கழிவறைகளும், மயானம் செல்லும் வழியில் பெண்கள், ஆண்களுக்கென்று தனியே பொது கழிப்பறைகளும் உள்ளன.
இவற்றில், மயானம் செல்லும் வழியில் ஆண்கள் பயன்படுத்தி வந்த நான்கு கழிவறைகளில் கான்கிரீட் மேற்கூரை நேற்று முன்தினம் நள்ளிரவில் இடிந்து விழுந்துள்ளது.
அப்பகுதி மக்கள் கூறியதாவது:
இங்கு மயானம் செல்லும் வழியில் உள்ள ஆண்கள், பெண்களுக்கென்று தனித்தனியே நான்கு இடங்களில் கழிவறைகள் அமைந்துள்ளன. ஆனால், இவை, 20 ஆண்டுகளை கடந்துவிட்டதால் மிகவும் மோசமான நிலையில் உள்ளன.
இவற்றில் ஆண்கள், பெண்கள் பயன்படுத்தும் இரண்டு தனி கழிப்பிடங்கள் மோசமாக இருந்ததால் பல மாதங்களாகவே பயன்பாடற்று கிடக்கிறது. இருக்கும் இரண்டு கழிப்பிடங்களை மோசமான நிலையில் பயன்படுத்தி வருகிறோம்.
மோசமான இக்கழிப்பறைகளை இடித்துவிட்டு புதுதாக கட்டினால் மட்டுமே எதிர்காலத்தில் பாதிப்புகளை தவிர்க்க முடியும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.
மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில்,'நாளை(இன்று) காலை கழிப்பறைகளை பார்வையிட்டு புதிதாக கட்டுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.