/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கிராம ஊராட்சிகளுக்கு ஆன்லைனில் மக்கள் வரி செலுத்துவதில் குழப்பம்! 'சாப்ட்வேர் அப்டேட்' முழுமை பெறாமல் சிக்கல்
/
கிராம ஊராட்சிகளுக்கு ஆன்லைனில் மக்கள் வரி செலுத்துவதில் குழப்பம்! 'சாப்ட்வேர் அப்டேட்' முழுமை பெறாமல் சிக்கல்
கிராம ஊராட்சிகளுக்கு ஆன்லைனில் மக்கள் வரி செலுத்துவதில் குழப்பம்! 'சாப்ட்வேர் அப்டேட்' முழுமை பெறாமல் சிக்கல்
கிராம ஊராட்சிகளுக்கு ஆன்லைனில் மக்கள் வரி செலுத்துவதில் குழப்பம்! 'சாப்ட்வேர் அப்டேட்' முழுமை பெறாமல் சிக்கல்
ADDED : ஆக 25, 2025 09:25 PM

பொள்ளாச்சி; கிராம ஊராட்சிகளில் 'ஆன்லைன்' வாயிலாக சொத்துவரி மற்றும் குடிநீர் கட்டணம் செலுத்த வழிவகை செய்யப்பட்டாலும், அதற்கான 'சாப்ட்வேர்' பணிகள் முழுமையாக 'அப்டேட்' செய்யப்படாததால், வரி செலுத்தும் மக்கள் குழப்பம் அடைகின்றனர்.
பொள்ளாச்சி, ஆனைமலை மற்றும் கிணத்துக்கடவு தாலுகாக்களில் மொத்தம், 118 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளில் வீட்டு வரி வசூலுக்கு ஏற்ப, அரசு வழங்கும் மானிய நிதியையும் சேர்ந்து, பணியாளர்களுக்கு சம்பளம், பொதுமக்களுக்கான அடிப்படை வசதி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
அதற்கேற்ப ஆண்டுக்கு ஒரு முறை வரி வசூலிக்கப்படுகிறது. வரியினங்களை செலுத்த மக்கள் தாமதம் செய்வதால், https://sdp.nic.in/vptax/ என்ற இணையதளம் வாயிலாக வரி வசூலிக்கும் திட்டம் கடந்தாண்டு நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது.
ஆனால், சில ஊராட்சிகளில், ஆண்டுக்கு ஏற்றாற்போல, 'சாப்ட்வேர் அப்டேட்' செய்யப்படாததால், வரி செலுத்தும் மக்கள் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர்.
குறிப்பாக, 'ஆன்லைன்' வாயிலாக வரி செலுத்தியும், அதற்கான தொகை இணையதளத்தில் 'அப்டேட்' ஆவதில்லை என, புகார் எழுந்துள்ளது. அந்தந்த நிதியாண்டின் வரித் தொகையை மட்டுமே 'டிமாண்ட்' செய்வதால், கடந்த நிதியாண்டின் நிலுவைத் தொகையை அறிந்து, அதனை செலுத்த முடியாமல் திணறுகின்றனர்.
பல ஊராட்சிகளில் இத்தகைய பிரச்னை நிலவுகிறது. பதிவு குறித்து எந்த தகவலும் கிடைக்காத மக்கள், நேரடியாக ஊராட்சி அலுவலகத்திற்கு செல்ல நேரிடுகிறது. அதன் பின், ஊராட்சி செயலர், 'ஆன்லைன்' போர்டலை பார்வையிட்ட பின், குறைபாடுகளை கண்டறிய முடிகிறது.
இதுகுறித்து, ஒன்றிய அலுவலர்கள் கூறியதாவது: ஊராட்சிகளில், 'ஆன்லைன்' வாயிலாக வரி வசூல் செய்யும் நடைமுறை கொண்டு வரப்பட்டாலும் 'சாப்ட்வேர் அப்டேட்' செய்யும் பணி படிப்படியாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சில ஊராட்சிகளில், அதற்கான பணி, 70 சதவீதம் மட்டுமே நிறைவு பெற்றுள்ளது.
குறிப்பாக, 'ஆன்லைன் எடிட் ஆப்ஷனில்' மாற்றங்கள் கொண்டு வரப்பட்டு, அதற்கேற்ப தரவுகள் பதிவேற்றம் செய்யப்பட்டும் வருகிறது. இப்பணிகள், நடப்பாண்டு இறுதிக்குள் நிறைவு செய்யப்படும்.
அதன்பின், சொத்துவரி, குடிநீர் கட்டணம் செலுத்துவதில் எந்த பிரச்னையும் இருக்காது. அதேநேரம், 'சாப்ட்வேர் அப்டேட்' செய்யப்பட்ட ஊராட்சிகளில், 'ஆன்லைன்' வாயிலாக முழு தகவல்களை அறிந்தும் கொள்ள முடியும்.
இவ்வாறு, ஒன்றிய அலுவலர்கள் கூறினர்.