/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கடைவீதியில் சரக்கு வாகனத்தால் நெரிசல்: திணறும் வாகன ஓட்டுநர்கள்
/
கடைவீதியில் சரக்கு வாகனத்தால் நெரிசல்: திணறும் வாகன ஓட்டுநர்கள்
கடைவீதியில் சரக்கு வாகனத்தால் நெரிசல்: திணறும் வாகன ஓட்டுநர்கள்
கடைவீதியில் சரக்கு வாகனத்தால் நெரிசல்: திணறும் வாகன ஓட்டுநர்கள்
ADDED : நவ 05, 2024 09:04 PM

பொள்ளாச்சி; பொள்ளாச்சியில், பகல் நேரத்தில், போக்குவரத்து நெரிசல் மிக்க கடை வீதிகளில், சரக்கு லாரிகளின் இயக்கத்தால், மக்கள் பாதிக்கின்றனர்.
பொள்ளாச்சி நகரில், நாளுக்கு நாள் வாகனங்களின் இயக்கம் அதிகரித்து வருகிறது. அதற்கேற்ப நெடுஞ்சாலையில் விரிவாக்கப் பணிகள் மேற்கொள்ளப்பட்டாலும், நகரச் சாலைகளின் கட்டமைப்பு மேம்படுத்தப்படாமல் உள்ளது.
ஆக்கிரமிப்பு காரணமாக, சாலை விரிவாக்கப் பணிகள் தடைபட்டுள்ளன. இதனால், அதிகரிக்கும் போக்குவரத்து விதிமீறலால், பிரச்னை அதிகரிக்கிறது. இதுஒருபுறமிருக்க, நெரிசலை கூடுதலாக்கும் வகையில், லாரிகள், சரக்கு வாகனங்கள் இயக்கமும் காணப்படுகிறது.
கடைவீதி, வெங்கட்டரமணன் வீதி, தெப்பக்குளம் வீதி, சத்திரம் வீதி, ராஜாமில் ரோடு உள்ளிட்ட பகுதிகளில், சரக்கு வாகனங்கள் நிறுத்துவதால் போக்குவரத்து பாதிக்கிறது. பல ஆண்டுகளாக இப்பிரச்னைக்கு தீர்வு காணப்படாமல் உள்ளது.
இந்நிலையில், நேற்று மதியம், 2:00 மணிக்கு, சரக்கு லாரி ஒன்று, இமான்கான் வீதி வழியாக இயக்கப்பட்டதால், நெரிசல் அதிகரித்தது. அவசர தேவைக்காக டூ-வீலர் மற்றும் ஆட்டோவில் பயணித்தவர்கள் மாற்றுப் பாதையில் சென்றனர்.
மக்கள் கூறியதாவது: சரக்கு கொண்டு வந்து இறக்கும் வாகனங்களுக்கு எவ்வித கட்டுப்பாடும், விதிமுறைகளும் கிடையாது. பகல் நேரத்தில், கடைகளுக்கு முன், சாலையின் ஒரு பகுதியை ஆக்கிரமித்து சரக்கு வாகனங்களை நிறுத்துவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர்.
அதிகாலை மற்றும் இரவில் மட்டுமே சரக்கு வாகனங்கள் நகருக்குள் பிரவேசிக்க அனுமதி அளிக்க வேண்டும். இதை கடுமையாக நடைமுறைப்படுத்தி, மீறுவோர் மீது நடவடிக்கை மேற்கொண்டால், நகரில் நிலவும் போக்குவரத்து நெரிசல் பெரும்பாலும் குறையும்.
இவ்வாறு, கூறினர்.