/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
காங்., கட்சியினர் மோதல்மயூரா மீது வழக்கு
/
காங்., கட்சியினர் மோதல்மயூரா மீது வழக்கு
ADDED : நவ 23, 2024 11:23 PM
கோவை: கோவை விமான நிலையத்தில் காங்., கட்சியினர் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக, காங்., தேசிய செயலாளர் மயூரா ஜெயக்குமார் உள்ளிட்ட மூவர் மீது, போலீசார் வழக்கு பதிந்தனர்.
காங்., கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் வேணுகோபால், கேரளா மாநிலத்தில் இருந்து மும்பை செல்வதற்காக கடந்த, 17ம் தேதி கோவை விமான நிலையம் வந்தார். அப்போது அவரை சந்திக்க காங்., நிர்வாகிகள் சென்றனர்.
கோவையில் உள்ள காங்., நிர்வாகிகள், கருத்து வேறுபாடு காரணமாக, பல்வேறு கோஷ்டிகளாக செயல்படுகின்றனர். கோவை வந்த வேணுகோபாலை சந்தித்தபோது ஒருவர் குறித்து ஒருவர் புகார் அளித்தனர்.
பின்னர், விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்தபோது, ஐ.என்.டி.யு.சி., தொழிற்சங்க மாநில பொதுச் செயலாளரான செல்வம், தேசிய செயலாளரான மயூரா ஜெயக்குமார் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில், மயூரா ஜெயக்குமார் செல்வத்தையும் அவருடன் இருந்தவர்களையும் தாக்க பாய்ந்தார். இது தொடர்பான வீடியோ பரவியது.
மேலும், சம்பவம் தொடர்பாக செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணனிடம் புகார் அளித்தனர்.
இந்நிலையில், பொது இடத்தில் ஆபாசமாக பேசுதல், கொலை மிரட்டல் விடுத்தல் ஆகிய குற்றங்களில் கோவை பீளமேடு போலீசார், மயூரா ஜெயக்குமார், காங்., கோவை மாநகர் மாவட்ட பொது செயலாளர் தமிழ் செல்வன் மற்றும் மாநகராட்சி கவுன்சிலர் கிருஷ்ணமூர்த்தி ஆகிய மூவர் மீதும் வழக்கு பதிவு செய்தனர்.