/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வாய்க்கால் ஆக்கிரமிப்பு கட்டடம் துாள் துாள்; மாநகராட்சி நகரமைப்பு பிரிவினர் நடவடிக்கை
/
வாய்க்கால் ஆக்கிரமிப்பு கட்டடம் துாள் துாள்; மாநகராட்சி நகரமைப்பு பிரிவினர் நடவடிக்கை
வாய்க்கால் ஆக்கிரமிப்பு கட்டடம் துாள் துாள்; மாநகராட்சி நகரமைப்பு பிரிவினர் நடவடிக்கை
வாய்க்கால் ஆக்கிரமிப்பு கட்டடம் துாள் துாள்; மாநகராட்சி நகரமைப்பு பிரிவினர் நடவடிக்கை
ADDED : நவ 28, 2024 05:59 AM

கோவை; கோவை மாநகராட்சி, சாரமேடு பகுதியில் நீர் வழங்கு வாய்க்காலை ஆக்கிரமித்து, 5,000 சதுரடி பரப்புக்கு கட்டியிருந்த புது கட்டடத்தை, நகரமைப்பு பிரிவினர் நேற்று இடித்து அகற்றினர். இதன் தொடர்ச்சியாக, மற்றொரு கட்டடத்தை இன்று (28ம் தேதி) இடிக்க இருக்கின்றனர்.
கோவை மாநகராட்சி, 86வது வார்டு கரும்புக்கடை அருகே சாரமேடு பகுதியில், சாலையோர ஆக்கிரமிப்புகள் அதிகமாக இருந்தன. ரோட்டின் அகலம், 15 அடியாக சுருங்கி இருந்தது.
மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் கள ஆய்வு செய்தபோது, 50 ஆண்டுகளுக்கு மேலாக ரோட்டை ஆக்கிரமித்து கட்டடங்கள் கட்டியிருப்பது கண்டறியப்பட்டது. அவற்றை இடித்து அகற்ற உத்தரவிட்டதை தொடர்ந்து, முதல்கட்டமாக, 23 கட்டடங்கள் இடிக்கப்பட்டன.
அதற்கு அருகாமையில், மூன்று கிளை வாய்க்கால்களை ஆக்கிரமித்து, 5,000 சதுரடிக்கு கட்டடம் கட்டியிருப்பது கண்டறியப்பட்டது; புதிதாக மீண்டும் ஒரு கட்டடம் கட்டுவதும் தெரியவந்தது. கட்டட உரிமையாளருக்கு மாநகராட்சி நகரமைப்பு பிரிவினர் நோட்டீஸ் வழங்கினர். ஆக்கிரமிப்பாளர் தரப்பில், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அவ்வழக்கில், வாய்க்கால் ஆக்கிரமிப்பை அகற்ற மாநகராட்சிக்கு உத்தரவிடப்பட்டது.
இதைத்தொடர்ந்து, போலீஸ் பாதுகாப்புடன், தெற்கு மண்டல உதவி நகரமைப்பு அலுவலர் ஜெயலட்சுமி தலைமையிலான குழுவினர் நேற்று ஆக்கிரமிப்பு கட்டடத்தை பொக்லைன் வாகனத்தால் இடித்து அகற்றினர். இன்னொரு கட்டடத்தை இடிக்கும் பணி இன்று (28ம் தேதி) தொடர்ந்து நடைபெறும், என, நகரமைப்பு பிரிவினர் தெரிவித்தனர்.