/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வேள்வி சாலை அமைக்கும் பணி விறு விறு
/
வேள்வி சாலை அமைக்கும் பணி விறு விறு
ADDED : ஆக 26, 2025 10:26 PM

அன்னுார்; அன்னுார் அருகே மதுர காளியம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு வேள்வி சாலை அமைக்கும் பணி வேகமாக நடைபெறுகிறது.
அன்னுார், மன்னீஸ்வரர் கோவிலுக்கு வடக்கே, ஓதிமலை சாலையில், லக்கே பாளையம் கோவில்பாளையத்தில், ஈஞ்ச குல மக்களால் 300 ஆண்டுகளுக்கு மேல் குலதெய்வமாக வழிபட்டு வரும் மதுரகாளியம்மன் கோவில் உள்ளது.
இக்கோவில் முழுவதும் கருங்கற்களால் கருவறை, விமானம், அர்த்தமண்டபம், முன் மண்டபம் மற்றும் விநாயகர், கருப்பராயர் மற்றும் பரிவார தெய்வங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தற்போது வேள்விச்சாலை அமைக்கும் பணி வேகமாக நடக்கிறது. கும்பாபிஷேக விழா வருகிற 31ம் தேதி அதிகாலை 4:00 மணிக்கு கோ பூஜை உடன் துவங்குகிறது. மாலையில் திருவிளக்கு வழிபாடு நடைபெறுகிறது. இரவு விமான கலசம் நிறுவப்படுகிறது.
செப். 1ம் தேதி காலை வேள்வி வழிபாடு நடைபெறுகிறது. 2ம் தேதி மதுர காளியம்மன் எழுந்தருளும் திருக்குடத்திற்கு வழிபாடு செய்தல் மற்றும் பேரொளி வழிபாடு நடக்கிறது. செப். 3ம் தேதி காலை புனித நீர் வழிபாடு, இரண்டாம் கால வேள்வி பூஜை நடக்கிறது.
இரவு எந்திர தகடு நிறுவுதலும், எண் வகை மருந்து சாத்துதலும் நடைபெறுகிறது. செப். 4ம் தேதி காலை 9:00 மணிக்கு விமான கலசங்களுக்கும், மூலவர் மதுர காளியம்மனுக்கும் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
விழாவில் பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகள், சிரவை ஆதீனம் குமரகுருபர சாமிகள் அருளுரை வழங்குகின்றனர்.