ADDED : ஏப் 15, 2025 07:03 AM

சூலுார்; சூலுார் அருகே கிரிக்கெட் பேட்டால் கட்டட தொழிலாளியை அடித்து கொன்ற நபரை போலீசார் கைது செய்தனர்.
கோவை மாவட்டம், சூலுார் அடுத்த பாப்பம்பட்டி காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன், 34. மனைவியை பிரிந்து தனியாக வசிக்கும் இவர், அதே பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். சங்கரன்கோவிலில் படித்து வரும் மகனும், மகளும் விடுமுறைக்காக பாப்பம்பட்டி வந்துள்ளனர்.
மணிகண்டன் வீட்டருகே மதுரையை சேர்ந்த சிக்கந்தர்,45 என்ற கட்ட தொழிலாளி வசித்து வருகிறார். இருவரும் நண்பர்கள் என்பதால், மாலை நேரத்தில் ஒன்றாக மது அருந்துவதை வாடிக்கையாக வைத்திருந்தனர்.வழக்கம் போல் நேற்று முன்தினம் இரவு மது அருந்தி உள்ளனர். சிக்கந்தர் கடைக்கு சென்று பரோட்டா வாங்கி வந்துள்ளார். மணிகண்டன், அவரது மகன் ஆகியோர் சாப்பிட்டனர். மகள் தூங்கி கொண்டிருந்தாள். போதையில் சிக்கந்தர் அச்சிறுமியை தகாத வார்த்தைகளில் திட்டி எழுப்பியதாக கூறப்படுகிறது. இதைக்கண்டு ஆத்திரமடைந்த மணிகண்டன், கிரிக்கெட் பேட்டால், சிக்கந்தரை சரமாரியாக அடித்துள்ளார். இதில் சிக்கந்தர் சம்பவ இடத்திலேயே இறந்தார். ஆத்திரம் குறையாத மணிகண்டன், சிக்கந்தர் சடலத்தை இழுத்து வந்து பல்லடம் - செட்டிபாளையம் ரோட்டில் போட்டு விட்டு வீட்டுக்கு சென்றார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற சூலுார் போலீசார், சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். மணிகண்டனை தேடி கண்டுபிடித்து கைது செய்தனர்.இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.