ADDED : மே 13, 2025 11:51 PM
கோவை; கோவை காந்திபுரம் ஆம்னி பஸ் ஸ்டாண்டு அருகே, 32 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர், நேற்று தலையில் ரத்தக்காயத்துடன் கிடந்தார்.
தகவல் அறிந்து வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். காட்டூர் போலீசார் பார்த்த போது, வாலிபர் தலையில் கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளது தெரியவந்தது.
போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், 'உடனிருந்த நண்பர்களிடம் நடந்த விசாரணையில், இறந்த நபரின் பெயர் தினேஷ்; கட்டடத் தொழிலாளி என்பதும், தனது நண்பர்களுடன் சேர்ந்து நேற்று முன்தினம் இரவு, ஆம்னி பஸ் ஸ்டாண்ட் அருகில் இருக்கும், டாஸ்மாக் மது பாரில் மது குடித்துள்ளதும் தெரிய வந்துள்ளது. உயிரிழந்த நபர், மற்றொரு நபரின் பாக்கெட்டில் இருந்து ரூ.50 பணத்தை எடுத்ததாக தெரிகிறது. இதனால், அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் செங்கல்லால் தாக்கப்பட்டு, படுகாயமடைந்து உயிரிழந்துள்ளார். பிடிபட்ட நண்பர்களிடம் விசாரித்து வருகிறோம்' என்றார்.