/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கன்டெய்னர் கடைகளில் நிழற்கூரை தேவை! ரேஷன் பொருட்கள் பெறுவதில் சிரமம்
/
கன்டெய்னர் கடைகளில் நிழற்கூரை தேவை! ரேஷன் பொருட்கள் பெறுவதில் சிரமம்
கன்டெய்னர் கடைகளில் நிழற்கூரை தேவை! ரேஷன் பொருட்கள் பெறுவதில் சிரமம்
கன்டெய்னர் கடைகளில் நிழற்கூரை தேவை! ரேஷன் பொருட்கள் பெறுவதில் சிரமம்
ADDED : ஏப் 28, 2025 10:46 PM

வால்பாறை; கன்டெய்னர் ரேஷன் கடைகளால், தொழிலாளர்கள் ரேஷன் பொருட்களை வாங்கிச்செல்வதில் சிரமம் நீடிக்கிறது.
வால்பாறை தாலுகாவில், மொத்தம் உள்ள, 15,250 குடும்ப அட்டைதாரர்களுக்கு, 43 ரேஷன் கடைகள் வாயிலாக அத்தியாவசியப்பொருட்கள் வழங்கப்படுகின்றன. இந்நிலையில், வால்பாறை நகரை தவிர பிற எஸ்டேட் பகுதிகளில் செயல்படும் ரேஷன் கடைகள் அனைத்தையும், யானைகள் அடிக்கடி சேதப்படுத்தி வருகின்றன.
இதனால், பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதமாகி வருவதோடு, பொதுமக்களுக்கு உரிய நேரத்தில் ரேஷன் பொருட்கள் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.
யானைகளின் தொந்தரவால், பெரும்பாலான எஸ்டேட்களில், மாதம் தோறும் திறந்தவெளியில் தான் ரேஷன் பொருட்களை வழங்குகின்றனர். இந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில், கோவை மாவட்ட கலெக்டரின் உத்தரவின் பேரில், வால்பாறையில் முதல் கட்டமாக நான்குரேஷன்கடைகள் கன்டெய்னர் கடைகளாக மாற்றப்பட்டன.
இதன் வாயிலாக, யானைகள் கடைகளை சேதப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதோடு, பொருட்களும் பாதுகாப்பாக உள்ளன. ஆனால், எஸ்டேட் தொழிலாளர்கள் ரேஷன் பொருட்களை வாங்கிச்செல்ல போதிய வசதி செய்துதரப்படவில்லை.
எஸ்டேட் தொழிலாளர்கள் கூறியதாவது:
யானையின் பிடியில் இருந்து ரேஷன் பொருட்களை பாதுகாக்க, கன்டெய்னர் கடைகள் மாற்றப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. ஆனால், வெயில் மற்றும் மழை காலங்களில், பல மணி நேரம் காத்திருந்து ரேஷன் பொருட்கள் வாங்கிச்செல்ல வேண்டிய நிலை உள்ளது.
எனவே, ரேஷன் பொருட்கள் இடையூறு இல்லாமல் வாங்கிச்செல்ல வசதியாக, கடையின் முன்பாக நிழற்கூரை அமைக்க வேண்டும்.
வால்பாறையில், புதியதாக அமைக்கப்பட்ட மூன்று கன்டெய்னர்கள் அமைக்கும் பணி நிறைவடைந்து, ஒரு மாதத்திற்கு மேல் ஆகியும், கடைகள் இன்று வரை திறக்கப்படவில்லை. இதனால், தற்காலிகமாக தொழிலாளர் குடியிருப்பு பகுதியில், பொதுமக்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கப்படுகிறது. இவ்வாறு, தெரிவித்தனர்.
வருவாய்த்துறை அதிகாரிகள் கூறுகையில், 'வால்பாறையில் யானைகள் வழித்தடத்தில் உள்ள ரேஷன் கடைகளை கண்டறிந்து, அவைகளை கன்டெய்னர் கடைகளாக மாற்றும் பணி தொடர்ந்து நடக்கிறது.
'அடுத்த மாதம் நடக்கும் அரசு விழாவில், மேலும் மூன்று இடங்களில் அமைக்கப்பட்டுள்ள கன்டெய்னர் கடைகள் மக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்படும். அதற்கு முன்னதாக கடைகளின் முன்பாக நிழற்கூரை அமைக்கவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும், என்றனர்.