ஒப்பந்த குடிநீர் பணியாளர்கள் பணி புறக்கணிப்பு போராட்டம்
ஒப்பந்த குடிநீர் பணியாளர்கள் பணி புறக்கணிப்பு போராட்டம்
UPDATED : அக் 15, 2026 05:57 PM
ADDED : அக் 15, 2026 05:54 PM

பொள்ளாச்சி: பொள்ளாச்சி நகராட்சி ஒப்பந்த குடிநீர் பணியாளர்கள், பணிகளை புறக்கணித்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பொள்ளாச்சி நகராட்சியில், குடிநீர் வினியோகம் முறையாக மேற்கொள்ள ஒப்பந்த அடிப்படையில், 25 பணியாளர்களும், அலுவலக பணிக்காக, 10 பேரும் நியமிக்கப்பட்டனர். முறையாக சம்பளம் வழங்காமல் காலதாமதம் செய்வதாக கூறி பணிகளை புறக்கணித்து, நகராட்சி அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர். இதனால், நகரில் குடிநீர் வினியோகம் உள்ளிட்ட பணிகள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.
ஒப்பந்த பணியாளர்கள் கூறியதாவது:
நகராட்சியில், ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் எங்களுக்கு, 11,500 – 16,000 ரூபாய் பணிக்கேற்ப சம்பளம் வழங்கப்படுகிறது. இந்த சம்பளம் ஒரு மாதம், 20ம் தேதியும், அடுத்தடுத்த மாதத்தில் மாறி மாறியும் வழங்கப்படுகிறது.
குறிப்பிட்ட தேதியில் சம்பளம் வழங்குவதில்லை. ஒவ்வொரு மாதமும் சம்பளம் வழங்க கோரி கேட்டு பெற வேண்டியுள்ளது. முழு சம்பளமும் வழங்காமல் குறைத்து வழங்குகின்றனர். இது குறித்து பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை.
எனவே, எங்களது கோரிக்கையை ஏற்று சம்பளம் முறையாக வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். போனில் தொடர்பு கொண்ட அதிகாரிகள், ‘சனிக்கிழமைக்குள் சம்பளம் வழங்குவதாக,’ தெரிவித்தனர்.
ஆனால், உடனடியாக சம்பளம் வழங்கினால் தான் பணிக்கு செல்வோம் என கூறி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.
இவ்வாறு, கூறினர்.
