விளைபயிர்களை சேதப்படுத்தும் யானைகளை கட்டுப்படுத்துங்க!
விளைபயிர்களை சேதப்படுத்தும் யானைகளை கட்டுப்படுத்துங்க!
ADDED : மே 28, 2026 06:00 AM

பொள்ளாச்சி: பொள்ளாச்சியில், விளை நிலங்களுக்குள் புகுந்து பயிர் மற்றும் மர வகைகளை சேதப்படுத்தும் காட்டு யானைகளை கட்டுப்படுத்த வேண்டுமென, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் வலியுறுத்தி உள்ளனர்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட துணை செயலாளர் மணிகண்டன் மற்றும் விவசாயிகள், சப் - கலெக்டர் அலுவலகத்தில், காட்டு யானைகளால் ஏற்படும் சேதத்தை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி மனு கொடுத்தனர்.
சங்க மாவட்ட துணை செயலாளர் கூறியதாவது:
ஆனைமலை அருகே, அங்கலகுறிச்சி, ஆழியாறு, துறையூர், மஞ்சநாயக்கனுார் ஆகிய கிராமங்களில் விவசாய நிலங்களுக்குள், கடந்த இரண்டு மாதங்களாக இரண்டு காட்டு யானைகள் வனப்பகுதியில் இருந்து இறங்கி தென்னை, மாமரம், விளைபயிர்களை சேதப்படுத்துவதால், விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்படுகிறது.
இரவு நேரங்களில் விவசாய நிலங்களுக்குள் யானை இறங்குவதால், அங்கு குடியிருக்கும் மக்கள் அச்சத்துடன் வாழும் நிலை உள்ளது.
மேலும், காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த பொள்ளாச்சி வனச்சரக அலுவலகம் முன்பாக, கடந்த ஜன., மாதம் போராட்டம் நடத்தியும் இதுவரை நடவடிக்கை இல்லை. எனவே, அகழி அல்லது மின்வேலி அமைத்து உயிர் சேதம், பயிர் சேதம் ஏற்படுவதை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.
