/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கொப்பரை கொள்முதல் விலை குறைவு; வெறிச்சோடிய ஒழுங்குமுறை கூடங்கள்
/
கொப்பரை கொள்முதல் விலை குறைவு; வெறிச்சோடிய ஒழுங்குமுறை கூடங்கள்
கொப்பரை கொள்முதல் விலை குறைவு; வெறிச்சோடிய ஒழுங்குமுறை கூடங்கள்
கொப்பரை கொள்முதல் விலை குறைவு; வெறிச்சோடிய ஒழுங்குமுறை கூடங்கள்
ADDED : ஜன 02, 2025 10:29 PM
அன்னுார்; அரசின் கொப்பரை கொள்முதல் விலை குறைவாக இருப்பதால், ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் வெறிச்சோடின. கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை மாவட்டத்தில், அன்னுார், தொண்டாமுத்தூர், செஞ்சேரிமலை, நெகமம், பொள்ளாச்சி, ஆனைமலை, கிணத்துக்கடவு ஆகிய ஊர்களில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில், மத்திய அரசின் விலை ஆதாரத்திட்டத்தின் கீழ் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்யப்படுகிறது. கோவை மாவட்டத்தில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தென்னை விவசாயிகள் உள்ளனர். மத்திய அரசின் கொப்பரை கொள்முதல் விலை மிகக் குறைவாக உள்ளது என புகார் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து கொங்கு மண்டல விவசாயிகள் நலச் சங்கத் தலைவர் முருகசாமி கூறுகையில், மத்திய அரசு, விவசாயிகளிடமிருந்து தற்போது ஒரு கிலோ அரவை கொப்பரை தேங்காய் 108 ரூபாய் 70 காசுக்கும், பந்து கொப்பரை தேங்காய் 117 ரூபாய் 50 காசுக்கும் கொள்முதல் செய்யப்படும் என அறிவித்துள்ளது.
நம் மாவட்டத்தில் பந்து கொப்பரை உற்பத்தி இல்லை. பந்து கொப்பரைக்கு மட்டும் ஏழு ரூபாய் 50 காசு உயர்த்தப்பட்டுள்ளதால் விவசாயிகளுக்கு எந்தப் பயனும் இல்லை. கட்டுப்பாடு விதிக்காமல் விவசாயிகள் கொண்டு வரும் கொப்பரை தேங்காய் அனைத்தையும் அரசு கொள்முதல் செய்ய வேண்டும்.
கொப்பரை தேங்காய் உற்பத்தி செய்வதற்கு ஒரு கிலோவுக்கு 140 ரூபாய் செலவாகிறது. ஆனால் மத்திய அரசு 108 ரூபாய் 70 காசு மட்டுமே தருகிறது. தற்போது வெளிச்சந்தையில் கூடுதல் விலை கிடைக்கிறது. மத்திய அரசு கொப்பரை தேங்காய் ஒரு கிலோ 150 ரூபாய்க்கு கொள்முதல் செய்ய வேண்டும், என்றார்.
வெளிச்சந்தையில் கொப்பரை தேங்காயை தனியார் வியாபாரிகள் அதிக விலைக்கு கொள்முதல் செய்வதால், அன்னுார் உள்ளிட்ட கோவை மாவட்டத்தில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் கொப்பரை கொள்முதலுக்கு விவசாயிகள் யாரும் வராமல் ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் வெறிச்சோடி உள்ளன.
கடந்த ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட கொள்முதலை விட இரண்டு மடங்கு கொப்பரை தேங்காயை விவசாயிகள் ஒழுங்குமுறை விற்பனை கூடங்களுக்கு கொண்டு வந்தனர். ஆனால் தற்போது இந்த நிலை மாறி உள்ளது.