/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தொழில்வரியால் நசுக்கும் மாநகராட்சி; குறுந்தொழில் முனைவோர் குமுறல்
/
தொழில்வரியால் நசுக்கும் மாநகராட்சி; குறுந்தொழில் முனைவோர் குமுறல்
தொழில்வரியால் நசுக்கும் மாநகராட்சி; குறுந்தொழில் முனைவோர் குமுறல்
தொழில்வரியால் நசுக்கும் மாநகராட்சி; குறுந்தொழில் முனைவோர் குமுறல்
ADDED : ஜன 13, 2025 06:12 AM
கோவை; தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர் சங்க (டேக்ட்) தலைவர் ஜேம்ஸ் நிருபர்களிடம் கூறியதாவது:
கோவையின் வளர்ச்சிக்குக் காரணம் தொழில்துறைதான். குறிப்பாக, குறுந்தொழில்கள். ஆனால், அத்தொழில் நலிவடைந்து வருவதை அரசோ, மாநகராட்சி நிர்வாகமோ கண்டுகொள்வதே இல்லை.
முன்னறிவிப்பு ஏதுமின்றி, கடந்த ஜூன் முதல் 18 கிலோவாட் மின் இணைப்புக்குக் கீழ் உள்ளவர்களுக்கு, 'பவர் பேக்ட்' நடைமுறையை அமல்படுத்தி, மின்கட்டணத்தில் 70 சதவீதம் வரை அபராதம் விதித்து, அரசு தொழில் முனைவோரை முடக்கியுள்ளது.
பம்ப் தொழில் ஏறக்குறைய நலிவடைந்து விட்டது. அதை நம்பியிருந்த ஆயிரக்கணக்கான தொழில்முனைவோர், கையறு நிலையில் உள்ளனர். ஆர்டர்கள் கிடைக்காமல், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குறுந்தொழில் முனைவோர் பாதிக்கப்பட்டுள்ளோம்.
இந்நிலையில், மாநகராட்சி நிர்வாகம் சொத்து வரி வசூலிக்க, ஒப்பந்தப் பணியாளர்களை நியமித்துள்ளது. குறுந்தொழில்களின் தன்மைக்கு ஏற்ப வரி விதிக்காமல், இஷ்டத்துக்கு வரியை உயர்த்தி விதிக்கின்றனர்.
சில குறுந்தொழில்கள் மிகக் குறுகிய இடத்தில் நடக்கின்றன. கீழே பணிமனை மேலே வீடு என இருப்பவர்கள் ஏராளம். இக்கட்டடத்துக்கு, வர்த்தக ரீதியாக வரிவிதிப்பு நியாயமற்றது. மாநகராட்சி நிர்வாகம், குறுந்தொழில்களை நசுக்குகிறது. நாங்கள் செய்வதறியாது விழிபிதுங்கி நிற்கிறோம்.
இவ்வாறு, அவர் தெரிவித்தார்.
மாவட்ட பொதுச் செயலாளர் பிரதாப் சேகர், கவுரவ ஆலோசகர் சந்திரசேகர் உட்பட நிர்வாகிகள் உடனிருந்தனர்.