/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அடிப்படை வசதி கோரி மாநகராட்சி அலுவலகம் முற்றுகை
/
அடிப்படை வசதி கோரி மாநகராட்சி அலுவலகம் முற்றுகை
ADDED : ஜூலை 12, 2025 01:13 AM

பெ.நா.பாளையம்; துடியலூர் அருகே உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் அடிப்படை வசதிகள் கோரி, அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் துடியலூர் மாநகராட்சி பிரிவு அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
துடியலூர் அருகே உள்ள வெள்ளக்கிணர் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்போர் பகுதியில் ஹட்கோ காலனி திட்டம், 1ல், 430 வீடுகள் உள்ளன. இதில், 3 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். இங்கு சாக்கடைகள் சரிவர சுத்தம் செய்யப்படாமல், கழிவு நீர் தேங்கி நிற்பதால், கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் சாக்கடைகள் சேதம் அடைந்து உள்ளதாலும், கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இப்பகுதியில் தெரு விளக்குகள் எரியாமல் உள்ளது. இப்பகுதியில் பழுதான மின்விளக்குகளை மாற்றி இரவு நேரங்களில் போதுமான வெளிச்சம் ஏற்படுத்தி தருமாறு பலமுறை கோரிக்கை விடுத்தும் மாநகராட்சி நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை. இதையடுத்து, நேற்று காலை தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்போர் நல சங்கம் சார்பில், தலைவர் ராஜகோபால் தலைமையில் திரளான பொதுமக்கள், மாநகராட்சி துடியலுார் பிரிவு அலுவலகத்தை முற்றுகையிட்டு அதிகாரிகளிடம் மனு கொடுத்தனர்.
பொதுமக்களின் அனைத்து கோரிக்கைகளையும் உரிய அதிகாரிகள், கவனத்துக்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும் என, உறுதி அளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.