/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குப்பை கிடங்கிற்குள் நுழைய மாநகராட்சி தடை மாற்று வழியில் சென்றால் மிரட்டும் அதிகாரிகள்
/
குப்பை கிடங்கிற்குள் நுழைய மாநகராட்சி தடை மாற்று வழியில் சென்றால் மிரட்டும் அதிகாரிகள்
குப்பை கிடங்கிற்குள் நுழைய மாநகராட்சி தடை மாற்று வழியில் சென்றால் மிரட்டும் அதிகாரிகள்
குப்பை கிடங்கிற்குள் நுழைய மாநகராட்சி தடை மாற்று வழியில் சென்றால் மிரட்டும் அதிகாரிகள்
ADDED : ஏப் 23, 2025 11:19 PM

கோவை, ; வெள்ளலுார் குப்பை கிடங்கிற்குள் வெளிநபர்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனால், கிடங்கிற்குள் என்ன நடக்கிறது என்பதே வெளியுலகிற்கு தெரியாத அளவுக்கு மர்மமாக இருக்கிறது.
கோவை மாநகர பகுதியில் சேகரமாகும் குப்பை, வெள்ளலுார் கிடங்கில், 150 ஏக்கர் பரப்பளவில் கொட்டப்படுகிறது. மலைக்குன்று போல் ஆங்காங்கே குப்பை குவியல் இருக்கிறது. கடந்தாண்டு ஏப்., மாதம் தீ விபத்து ஏற்பட்டது.
இவ்வாண்டு இப்பிரச்னை வந்தால், உடனுக்குடன் தீர்வு காணும் விதமாக, பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. செயற்கை குட்டை உருவாக்கப்பட்டு, உக்கடம் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து சுத்திகரித்த தண்ணீர் 'பம்ப்' செய்யப்பட்டு, வெள்ளலுார் தருவிக்கப்படுகிறது.
இச்சூழலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென தீ விபத்து ஏற்பட்டது; மூன்று ஏக்கர் பரப்பளவில் கொட்டியிருந்த குப்பை எரிந்தது; கரும்புகை பரவியதால் காற்று மாசடைந்து, சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டது. தீயை அணைக்க தண்ணீர் தேவைப்படும் என்பதால், குட்டைக்கு சுத்திகரித்த கழிவு நீர் தருவிக்கப்பட்டது.
தீவிபத்து ஏற்படும் சமயங்களில், வெள்ளலுார் பகுதியை சேர்ந்தவர்கள் கிடங்கிற்குள் வந்தால், மொபைல் போன்களில் வீடியோ மற்றும் புகைப்படங்கள் எடுத்து, சமூக வலைதளங்களில் பரப்பி விடுகின்றனர்.
சில நிமிடங்களிலேயே வைரலாவதால், மாநகராட்சிக்கு நெருக்கடியை ஏற்படுத்துகிறது. அதனால், குப்பைகிடங்கிற்குள் வெளிநபர்கள் நுழையக் கூடாது என கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
நுழைவாயிலில் செக்போஸ்ட் போடப்பட்டு, காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். யார் வந்தாலும் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து, அனுமதி அளித்தால் மட்டுமே அனுப்புகின்றனர்; இல்லையெனில் திருப்பி அனுப்புகின்றனர்.
அனுமதி பெற்று சென்றாலும், வரையறுக்கப்பட்ட இடத்தை தவிர வேறெங்கும் செல்லக் கூடாதென, மாநகராட்சி பொறியியல் பிரிவு அதிகாரிகளால் தடை விதிக்கப்படுகிறது. மாற்று வழித்தடங்களில் சென்றாலும், அதிகாரிகளால் மிரட்டப்படுகின்றனர்.
ஏனெனில், இதே குப்பை கிடங்கு வளாகத்தில் குழி தோண்டி, டன் கணக்கில் இறைச்சி கழிவுகள் புதைக்கப்படுகின்றன. கேரளாவில் இருந்து மருத்துவ கழிவுகள் கன்டெய்னர்களில் கொண்டு வரப்படுவதாகவும் ஒரு குற்றச்சாட்டு, அப்பகுதி மக்களிடம் நிலவுகிறது.
அடுத்த கட்டமாக, குப்பையில் காஸ் தயாரிக்கும் திட்டம், மின்சாரம் தயாரிக்கும் திட்டங்கள் செயல்படுத்த உள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது. இவ்விரு திட்டங்களும் செயல்பாட்டுக்கு வரும் சமயத்தில், சுற்றுவட்டார உள்ளாட்சி அமைப்புகளில் சேகரமாகும் குப்பையும் டன் கணக்கில் வெள்ளலுாருக்கு தருவிக்கப்படும்.
இப்பகுதியை குப்பை கொட்டுவதற்கான நிரந்தர மையமாக மாநகராட்சி மாற்றி விட்டதால், சுற்றுவட்டார மக்கள் அதிருப்தியில் உள்ளனர். இதன் காரணமாகவே, கிடங்கிற்குள் அப்பகுதியை சேர்ந்தவர்கள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

