/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
உக்கடம், வாலாங்குளத்தில் ஆகாயத் தாமரை ஆக்கிரமிப்பு; மாநகராட்சி அலட்சியம்; நீர் நிலை ஆர்வலர்கள் வேதனை
/
உக்கடம், வாலாங்குளத்தில் ஆகாயத் தாமரை ஆக்கிரமிப்பு; மாநகராட்சி அலட்சியம்; நீர் நிலை ஆர்வலர்கள் வேதனை
உக்கடம், வாலாங்குளத்தில் ஆகாயத் தாமரை ஆக்கிரமிப்பு; மாநகராட்சி அலட்சியம்; நீர் நிலை ஆர்வலர்கள் வேதனை
உக்கடம், வாலாங்குளத்தில் ஆகாயத் தாமரை ஆக்கிரமிப்பு; மாநகராட்சி அலட்சியம்; நீர் நிலை ஆர்வலர்கள் வேதனை
ADDED : மே 07, 2025 01:06 AM

கோவை: உக்கடம் மற்றும் வாலாங்குளத்தில் நேரடியாக கழிவு நீர் கலப்பதால், ஆகாயத் தாமரை படர்வது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
கோவை நகர் பகுதியில் உள்ள ஒன்பது குளங்கள், மாநகராட்சி பராமரிப்பில் இருக்கின்றன. இவை பராமரிப்பின்றி, புதர்மண்டி, மழை நீர் தேக்கப்படாமல், வறண்டு காணப்பட்டிருந்த காலத்தில், பல்வேறு தன்னார்வ அமைப்பினரும், பொதுமக்களும் ஒன்று சேர்ந்து, குளங்களை துார்வாரி, கரையை பலப்படுத்தினர். அதன் பலனாகவே இன்றைய தினமும் ஒவ்வொரு குளத்திலும் தண்ணீர் தேங்குகிறது.
அதன் பின், 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில், கோடிக்கணக்கில் பணத்தை செலவிட்டு, மாநகராட்சி நிர்வாகம் பொழுதுபோக்கு வசதிகளை உருவாக்கியது. உக்கடம் மற்றும் வாலாங்குளத்தில் படகு சவாரி இயக்கப்பட்டது.
குளங்களில் கழிவு நீர் நேரடியாக கலப்பதை தடுக்க சுத்திகரிப்பு நிலையங்கள் கட்டப்பட்டன. அவற்றை ஒழுங்காக இயக்காததால், கழிவு நீர் கலப்பது தொடர்கிறது. அதனால், குளம் முழுவதும் ஆகாயத்தாமரை படர்ந்து வருகிறது.
இதைப்பார்க்கும் நீர் நிலை ஆர்வலர்கள், மன வேதனை அடைகின்றனர். குளங்களை உருவாக்குவதற்கு எடுத்துக் கொண்ட சிரத்தை, மழை நீரை தேக்கி, நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்துவதற்கு எடுத்துக் கொண்ட மெனக்கெடல் ஆகியவற்றை அசைபோடும் அவர்கள், மாநகராட்சியின் அலட்சியத்தால் ஆகாயத் தாமரை படர்வதால், அதிருப்தி அடைந்திருக்கின்றனர். இதன் காரணமாக, இவ்விரு குளங்களிலும் படகு சவாரி நிறுத்தப்பட்டுள்ளது.
கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன் கூறுகையில், ''உக்கடம், வாலாங்குளத்தில் கழிவு நீர் தேக்குவதால் மட்டுமே ஆகாயத்தாமரை படர்கிறது. இவ்விரு குளங்களிலும் கட்டியுள்ள சுத்திகரிப்பு நிலையங்களை, முழுமையாக செயல் பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.
பாதாள சாக்கடை திட்டத்தை விரைவுபடுத்தி, சுத்திகரிப்பு நிலையங்களுக்கு கழிவு நீரை கொண்டு சென்றாலே குளங்களுக்கு வராது; ஆகாயத்தாமரை படராது. வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர் மற்றும் மழை நீரை தனித்தனியாக அனுப்பினால், இப்பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும்,'' என்றார்.

