/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தமிழகத்தை புறக்கணிக்கும் இந்திய பருத்தி கழகம்: ஸ்பின்னிங் மில் உரிமையாளர்கள் புகார்
/
தமிழகத்தை புறக்கணிக்கும் இந்திய பருத்தி கழகம்: ஸ்பின்னிங் மில் உரிமையாளர்கள் புகார்
தமிழகத்தை புறக்கணிக்கும் இந்திய பருத்தி கழகம்: ஸ்பின்னிங் மில் உரிமையாளர்கள் புகார்
தமிழகத்தை புறக்கணிக்கும் இந்திய பருத்தி கழகம்: ஸ்பின்னிங் மில் உரிமையாளர்கள் புகார்
ADDED : ஜூலை 28, 2025 09:24 PM
அன்னுார்; 'தமிழகத்தில் உள்ள ஸ்பின்னிங் மில்களுக்கு தேவையான பஞ்சு இந்திய பருத்தி கழகம் வழங்குவதில்லை,' என புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து ஸ்பின்னிங் மில் உரிமையாளர்கள் சிலர் கூறியதாவது :
அகில இந்திய அளவில் 4,000 க்கும் மேற்பட்ட சிறு, நடுத்தர மற்றும் பெரிய ஸ்பின்னிங் மில்கள் உள்ளன. இதில் 40 சதவீத மில்கள் தமிழகத்தில் மட்டும் உள்ளன. குறிப்பாக கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர் மாவட்டங்களில் அதிக அளவில் ஸ்பின்னிங் மில்கள் உள்ளன. நம் நாட்டில் உற்பத்தியாகும் பருத்தி, ஸ்பின்னிங் மில்களுக்கு போதுமானதாக இல்லை. எனவே ஒரு பகுதி மில்கள் இறக்குமதியை நம்பி இருக்கின்றன.
கடந்த இரண்டு ஆண்டுகளாக மத்திய அரசு விவசாயிகளிடம் பருத்தி கொள்முதல் செய்வதற்கான குறைந்தபட்ச ஆதார விலையை கணிசமாக உயர்த்தி விட்டது.
இந்திய பருத்தி கழகம் இதனால் கூடுதல் விலை கொடுத்து பருத்தியை கொள்முதல் செய்து கிடங்குகளில் வைத்து ஸ்பின்னிங் மில்கள் மற்றும் பருத்தி வியாபாரிகளுக்கு விற்பனை செய்து வருகிறது. இந்திய பருத்தி கழகம் தமிழகத்தில் பருத்தி, பஞ்சு அதிகமாக விற்பனை செய்வது இல்லை. தமிழகத்தை புறக்கணிக்கிறது.
இதனால் அதிக தொலைவில் உள்ள ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா, குஜராத் ஆகிய மாநிலங்களில் இருந்து பஞ்சு வாங்க வேண்டி உள்ளது.
இதனால் ஒரு கண்டி பஞ்சுக்கு 2000 ரூபாய் கூடுதலாக செலவாகிறது. மேலும் இந்திய பருத்திக் கழகத்தில் முன் பதிவு செய்யும்போது 10 சதவீதம் தொகை முன்பணமாக செலுத்த வேண்டும். டெலிவரிக்கு 24 மணி நேரம் முன்னதாகவே மீதி 90 சதவீதம் செலுத்த வேண்டி உள்ளது.
ஸ்பின்னிங் மில்கள் அதிக அளவில் உள்ள தமிழகத்தில் குறிப்பாக கோவை, திருப்பூர் மாவட்டங்களில் இந்திய பருத்தி கழகம் பெரிய அளவில் குடோன்களை அமைத்து அதிக அளவில் பஞ்சு விற்பனை செய்ய வேண்டும்.
ஏற்கனவே தமிழகத்தில், மிக அதிக மின்கட்டணம், தொழிலாளர் சம்பள உயர்வு, வங்கி கடனுக்கான வட்டி அதிகரிப்பு, நூல் தேக்கம், வெளிநாட்டு ஆர்டர் ரத்து ஆகியவற்றால் ஸ்பின்னிங் மில்கள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளன.
இதிலிருந்து மீள இந்திய பருத்தி கழகம் கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் அதிக அளவில் இருப்பு வைத்து விற்பனை செய்ய வேண்டும். மின் கட்டணம் மற்றும் மின்சார நிலை கட்டணம், வங்கி கடனுக்கான வட்டி ஆகியவற்றை குறைக்க வேண்டும்.
ஏற்றுமதி செய்ய புதிய வாய்ப்புகளை ஏற்படுத்தித் தர வேண்டும். ஊக்குவிப்பு சலுகைகளை அதிகரிக்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.