/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் ஆவேசம்; அதிகாரிகள் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டு... அரசுக்கு அவப்பெயர்!
/
நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் ஆவேசம்; அதிகாரிகள் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டு... அரசுக்கு அவப்பெயர்!
நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் ஆவேசம்; அதிகாரிகள் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டு... அரசுக்கு அவப்பெயர்!
நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் ஆவேசம்; அதிகாரிகள் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டு... அரசுக்கு அவப்பெயர்!
ADDED : ஆக 01, 2024 12:44 AM

பொள்ளாச்சி : 'நகராட்சி அதிகாரிகள் யாருக்காக வேலை செய்கிறீர்கள்; எந்த வேலையும் சரியாக செய்வதில்லை. அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்படுகிறீர்கள்,' என, பொள்ளாச்சி நகராட்சி கூட்டத்தில் கேள்வி எழுப்பப்பட்டது.
பொள்ளாச்சி நகராட்சி கவுன்சில், சாதாரண கூட்டம் நேற்று நடந்தது. நகராட்சி தலைவர் தலைமை வகித்தார். கமிஷனர் (பொ) செந்தில்குமரன் மற்றும் அதிகாரிகள், கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.
துணை தலைவர் கவுதமன்: நகராட்சிக்கு சொந்தமான வரியில்லா இனங்களின், ஆண்டு குத்தகை இனத்தில் ஏலம் விட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நீண்ட காலமாக ஏலம் விடாமல் இருந்து, நகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தியதற்கான காரணத்தை தெரிவிக்க வேண்டும்.
கவுன்சிலர் செந்தில் (தி.மு.க.,): கழிப்பிடம் உள்ளிட்டவற்றுக்கு கட்டணம் யார் வசூலித்தது; எவ்வளவு தொகை வசூலிக்கப்பட்டது என்ற விபரங்களை தெரிவிக்க வேண்டும்.
அதிகாரிகள்: கழிப்பிடத்துக்கு கட்டணம் வசூலிக்க ஏலம் விட தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வருவாய்துறை வாயிலாகத்தான் இதுவரை வசூலிக்கப்பட்டது.
துணை தலைவர்: இத்தனை ஆண்டுகள் ஏன் ஏலம் விடவில்லை. இதற்கான காரணத்தை தெரிவிக்க வேண்டும். அதிகாரிகள் யாருக்காக வேலை செய்கிறீர்கள்; எந்த வேலையும் சரியாக செய்வதில்லை. அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தும் வகையில் அதிகாரிகள் செயல்படுகிறீர்கள். வருவாய்துறை என்பது, நகராட்சிக்கு வருவாய் இனங்களை கண்காணித்து வசூலிக்க வேண்டும். அந்த வேலையை கூட சரியாக செய்யாமல் இருக்கின்றனர்.
செந்தில்: எந்த துறையிலும் வேலை நடக்கவில்லை; பணம் கொடுத்தால் தான் வேலை செய்கின்றனர் என்பதை பதிவு செய்கிறேன்.
பெரும்பாலான கவுன்சிலர்கள் பேசியதாவது: பஸ் ஸ்டாண்டில் வருமானம் வந்த கடை, பூட்டப்பட்டுள்ளது. இதுவரை ஏலம் விடவில்லை. காந்தி மார்க்கெட்டில் உள்ள கடைகள், ரயில்வே ஸ்டேஷன் பகுதி, பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகளும் ஏலம் விடாமல் உள்ளனர். இதனால், நகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது.
ஜேம்ஸ்ராஜா (அ.தி.மு.க.,): தேர்நிலையம் மார்க்கெட் கடைகள் கட்டப்பட்டுள்ளன. பழைய வியாபாரிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுமா. புதியதாக கட்டப்படும் பஸ் ஸ்டாண்டுக்கு எந்த பஸ்கள் செல்லும் என்பதை விளக்க வேண்டும்.
கமிஷனர்: சட்டப்படி தான் ஏலம் விடப்படும். பொது ஏலமாகத்தான் விடப்படும்.
இவ்வாறு, கவுன்சிலில் விவாதம் நடந்தது.
அதிகாரிகள் திணறல்
ஏலம் குறித்த தகவல்கள் தெரிவிப்பதில்லை; அதிகாரிகள் முறையாக பணிகளில் ஈடுபடுவதில்லை என, அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை தெரிவித்து, துணை தலைவர், கவுன்சிலர்கள் பேசினர். இதற்கு அதிகாரிகள் முறையாக தகவல் தெரிவிக்க முடியாமல் திணறினர்.