/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கவுன்சிலர் தர்ணா; விக்டோரியா ஹால் முற்றுகை
/
கவுன்சிலர் தர்ணா; விக்டோரியா ஹால் முற்றுகை
ADDED : ஜூலை 31, 2025 10:20 PM

கோவை; கோவை மாநகராட்சியில் நேற்று மாமன்ற கூட்டம் நடந்தது.
எஸ்.டி.பி.ஐ., கட்சியை சேர்ந்த, 84வது வார்டு கவுன்சிலர் அலிமா பேகம், தனிநபராக மாநகராட்சி அலுவலகத்துக்கு கையில் தட்டியுடன் வந்து, நாய் கருத்தடை மையத்தை அகற்றக்கோரி, தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அவரை, போலீசார் சமாதானப்படுத்தினர்.
நிருபர்களிடம் அவர் கூறுகையில், ''உக்கடம் புல்லுக்காடு பகுதியில் உள்ள நாய் கருத்தடை மையத்தை இடமாற்றம் செய்ய வேண்டும்; அம்மையத்தால் பெண்களும், குழந்தைகளும் பாதிக்கப்படுகின்றனர் பல முறை மாநகராட்சியில் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. கருத்தடை செய்து விட்டு இதே பகுதியில் விடுவதால், தொந்தரவாக இருக்கிறது. மையத்தை புதுப்பிக்கும் பணியை கைவிட வேண்டும். இதுவரை, 10க்கும் மேற்பட்ட குழந்தைகளை நாய்கள் கடித்திருக்கின்றன,'' என்றார்.
அதன்பின், 86வது வார்டை சேர்ந்த த.மு.மு.க., கவுன்சிலர் அகமது கபீர் மற்றும் அன்பு நகர் மற்றும் ரோஸ் பார்க் குடியிருப்போர், விக்டோரியா ஹால் அரங்கை முற்றுகையிட்டதால், பரபரப்பான சூழல் ஏற்பட்டது. கமிஷனரை நேரில் சந்தித்து பேசும் வரை கலைந்து செல்ல மாட்டோம், என கூறியதால், பதற்றம் ஏற்பட்டது.மாநகராட்சி துணை கமிஷனர் குமரேசன், தெற்கு மண்டல உதவி கமிஷனர் குமரன் ஆகியோர் பேச்சு நடத்தியும், சமாதானம் ஆகவில்லை. மாமன்ற கூட்டம் முடிந்ததும் சந்திப்பதாக கமிஷனர் கூறியதால், காத்திருந்தனர்.
'மழை நீர் வடிகால் கட்டித்தர வேண்டும்; பாதாள சாக்கடை, குடிநீர் மற்றும் ரோடு வசதி செய்து கொடுக்க வேண்டும்' என, அவர்கள் முறையிட்டனர். இக்கோரிக்கையை, மன்றத்தில் கவுன்சிலர் முறையிட்டார்.அதற்கு, 'அங்கீகரிக்கப்பட்ட மனைப்பிரிவாக இருப்பதால், மாநகராட்சியால் பணிகள் மேற்கொள்ள முடியாது. ரோடுகளை மாநகராட்சிக்கு தானமாக எழுதிக் கொடுத்தால் மட்டுமே செய்து தர வேண்டும்' என, கமிஷனர் பதிலளித்தார். இதன்பின், ரோஸ் பார்க் குடியிருப்போர், கமிஷனரை நேரில் சந்தித்து முறையிட்டபோது, 'நிலத்தை விற்பனை செய்தவர் இறந்து விட்டார் என்பதால், மாநகராட்சிக்கு தானமாக எழுதிக் கொடுக்க வாய்ப்பில்லை' என்றனர்.
அதற்கு பதிலாக, குடியிருப்போர் சங்கத்தினர் எழுத்துப்பூர்வமாக எழுதிக் கொடுத்தால், அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க முயற்சிப்பதாக கமிஷனர் கூறினார். குடியிருப்போர் சங்கம் சார்பில் கடிதம் கொடுப்பதாக கூறி, அவர்கள் கலைந்து சென்றனர்.

