/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
காரமடை நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் தரையில் அமர்ந்து தர்ணா
/
காரமடை நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் தரையில் அமர்ந்து தர்ணா
காரமடை நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் தரையில் அமர்ந்து தர்ணா
காரமடை நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் தரையில் அமர்ந்து தர்ணா
ADDED : நவ 01, 2025 12:38 AM

மேட்டுப்பாளையம்: காரமடை நகராட்சி கூட்டத்தில் துணை தலைவர் (காங்.,) மற்றும் தி.மு.க., கவுன்சிலர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.
கோவை காரமடை நகராட்சியில் நகர்மன்ற கூட்டம் நகர்மன்ற தலைவர் (தி.மு.க.,) உஷா தலைமையில், கமிஷனர் மதுமதி முன்னிலையில் நடைபெற்றது.
கூட்டம் ஆரம்பித்த போது, தங்களது வார்டுகளுக்கு தேவைப்படும் அடிப்படை வசதிகளுக்கான கோரிக்கைகள் தொடர்பாக, தீர்மானம் வைக்கப்படவில்லை எனவும், மிகவும் குறைந்த அளவே சுமார் ரூ.2 லட்சம் மதிப்பிலான வேலைகள் வைக்கப்பட்டுள்ளது எனவும், மற்ற வார்டு கவுன்சிலர்களுக்கு ரூ.10 முதல் ரூ. 20 லட்சம் வரை வேலைகள் வைக்கப்பட்டுள்ளது எனக்கூறி, துணை தலைவரும் காங்கிரஸ் கவுன்சிலருமான மல்லிகா, தி.மு.க., கவுன்சிலர்கள் தியாகராஜன், கண்ணப்பன், ரவிக்குமார், நித்யா, ரேவதி, அமுதவேணி, சாந்தி உள்ளிட்டோர் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.
இதற்கு தி.மு.க.,வை சேர்ந்த நகராட்சி தலைவர் உஷா பதில் அளித்து பேசுகையில், ''ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு வார்டுகளிலும் தேவைப்படும் வேலைகள் செய்யப்பட்டுள்ளது. இன்னமும் செய்யப்பட்டு வருகிறது. பாரபட்சம் பார்க்கவில்லை,'' என்றார்.
வனிதா (அ.தி.மு.க.,): எனது வார்டில் இதுவரை சுமார் ரூ.70 லட்சம் மதிப்பில் மட்டுமே வேலை நடந்துள்ளது. குடிநீர் விநியோகம் சீராய் வருவதில்லை, கொசு மருந்து அடிப்பது இல்லை. எனது கோரிக்கைகளை யாரும் காது கொடுத்து கேட்கவில்லை.
தியாகராஜன் (தி.மு.க.,)-: மூகாம்பிகை நகர் பகுதியில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. ஜே.ஜே. நகர் பகுதியில் பாதி முடிக்கப்பட்ட மழைநீர் வடிகால் காரணமாக டி.ஜி.,புதுார் சாலையில் தண்ணீர் செல்கிறது. நாங்கள் வைக்கும் கோரிக்கைகளை தலைவர் நிராகரிக்கிறார்.
குருபிரசாத், (தி.மு.க.,)-: நகராட்சி அதிகாரிகள் தவறான தகவல்களை அளிக்கின்றனர். நகராட்சியில் இதுவரை வைக்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான தீர்மானங்கள் இன்னும் செயல்பாட்டிற்கு வராமல், வெற்று தீர்மானங்களாகவே உள்ளன. அதே போல் ஒப்பந்தம் போடுவது, அதனை டெண்டர்விடுவது, பின் டெண்டரை ரத்து செய்வது. ஒரு தீர்மானத்தை கொண்டு வருபவர் தலைவர் தான், தீர்மானம் கொண்டுவரும் போதே அது நிறைவேற்ற முடியுமா, முடியாதா என தெரியவேண்டாமா. கவுன்சிலர்களிடம் எந்த ஆலோசனையும் இன்றி தீர்மானம் வைக்கப்படுகிறது.
அமுதவேணி, (தி.மு.க.,)-: மாற்றான் தாய் மனப்பான்மையுடன் நகராட்சி தலைவர் நடக்கிறார்.
சாக்கடை வசதி வேண்டி பல ஆண்டுகளாக போராடி வருகிறேன். அடிப்படை வசதிகளை நிறைவேற்றி தரமுடியாமல் வார்டுக்குள் செல்ல முடியவில்லை.
ராமுகுட்டி (தி.மு.க.,)-: குறைவான வேலைகள் மட்டுமே நடந்துள்ள வார்டுகளுக்கு, சரிசமமாக வேலைகள் பிரித்து செய்யப்பட வேண்டும். அவசியம் கருதி எந்த வேலை முக்கியமோ அதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.--------

