/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சுப்பிரமணியர் கோவிலில் உண்டியல் எண்ணிக்கை
/
சுப்பிரமணியர் கோவிலில் உண்டியல் எண்ணிக்கை
ADDED : ஜூன் 25, 2025 10:15 PM

மேட்டுப்பாளையம்; சுப்பிரமணியர் சுவாமி கோவிலில், உண்டியல்களில் உள்ள காணிக்கைகள் எண்ணப்பட்டன. இதில் இரண்டு லட்சத்து, 30 ஆயிரம் ரூபாய் இருந்தது.
மேட்டுப்பாளையம் பவானி ஆற்றின் கரையோரம், மிகவும் பழமையான சுப்பிரமணியர் சுவாமி கோவில் உள்ளது. இது ஹிந்து சமய அறநிலைத்துறைக்கு உட்பட்டதாகும். இக்கோவிலில் பக்தர்கள் வழங்கும் காணிக்கைகள், மூன்று அல்லது நான்கு மாதங்களுக்கு ஒரு முறை எண்ணப்படுவது வழக்கம்.
நேற்று இக்கோவிலில் உண்டியல்களில் இருந்த காணிக்கைகள் எண்ணும் பணிகள் நடைபெற்றன. மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில் தக்கார் மேனகா தலைமையில், உதவி கமிஷனர் கைலாசமூர்த்தி முன்னிலையில், மூன்று உண்டியல்களில் இருந்த காணிக்கைகள் எண்ணப்பட்டன.
இதுகுறித்து கோவில் உதவி கமிஷனர் கைலாச மூர்த்தி கூறியதாவது: கோவில் உண்டியல் பூட்டுகளில் இரண்டு சாவிகளை,போட்டு திறந்தால் தான், உண்டியல்கள் திறக்க முடியும். ஒரு சாவி பரம்பரை அறங்காவலரிடமும், மற்றொரு சாவி கோவில் செயல் அலுவலரிடம் இருக்கும். கோவில் பரம்பரை அறங்காவலராக இருந்த வசந்தா மீது, ஒழுங்கு நடவடிக்கை எடுத்து, கடந்தாண்டு தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டார். அவர் தன்னிடம் உள்ள சாவிகளையும், பொறுப்புகளையும், கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கவில்லை. இதைத் தொடர்ந்து பண்ணாரி அம்மன் கோவில் துணை கமிஷனர் மேனகா, இக்கோவிலின் தக்காராக நியமிக்கப்பட்டார்.
கடந்த ஒரு ஆண்டாக சாவிகள் இல்லாததால் உண்டியல் எண்ணாமல் இருந்தது. அதனால் வருவாய் துறை, கோவில் நிர்வாகம், போலீசார் ஆகிய மூன்று துறையினர் முன்னிலையில், உண்டியல்களில் இருந்த காணிக்கைகள் எண்ணப்பட்டன. உண்டியல்களில் இரண்டு லட்சத்து, 30 ஆயிரம், 586 பணமும், 16 கிராம் தங்கமும், 38 கிராம் வெள்ளியும் இருந்தது. இவ்வாறு உதவி கமிஷனர் கூறினார்.