/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கொரியர் பார்சல் காணோம் இழப்பீடு வழங்க உத்தரவு
/
கொரியர் பார்சல் காணோம் இழப்பீடு வழங்க உத்தரவு
ADDED : டிச 31, 2025 05:03 AM
கோவை: கொரியர் நிறுவனத்தால் அனுப்பப்பட்ட பார்சல் காணாமல் போனதால், ரூ. 30 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டது.
கீரணத்தம், ஸ்ரீ கிருஷ்ணா நகரில் வசிப்பவர் முத்துக்குமார். எர்ணாகுளத்தில் உள்ள வாடிக்கையாளருக்கு, ஹார்டு டிஸ்க் மற்றும் புகைப்படங்கள் அடங்கிய பார்சலை, வடவள்ளியில் உள்ள டி.டி.டி.சி., எக்ஸ்பிரஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தால், 2025 மே 3ம் தேதி அனுப்பியுள்ளார்.
இப்பார்சல், அம்மாதம் 5ம் தேதி, பாலக்காடு, கஞ்சிக்கோடு என்ற முகவரிக்கு மாற்றி டெலிவரி செய்யப்பட்டதாக, பார்சல் நிறுவனத்தின் ஆன்லைன் டிராக் வசதி மூலம் தெரியவந்துள்ளது.
முத்துக்குமார், வடவள்ளி, டி.டி.டி.சி., எக்ஸ்பிரஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு இ-மெயில், வாட்ஸ் அப் மற்றும் நேரில் சென்றும் புகார் அளித்துள்ளார். தவறாக டெலிவரி செய்யப்பட்டதாக குறிப்பிட்ட முகவரியிலும், பார்சல் அளிக்காதது தெரியவந்துள்ளது.
2025, ஜூலை 24ம் தேதி, இழப்பீடு வழங்க கோரி, கோவை நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
விசாரித்த, ஆணைய தலைவர் தங்கவேல் பிறப்பித்த உத்தரவில், ' பொருள் இழப்பீட்டிற்கு ரூ.20 ஆயிரம், சேவை குறைப்பாட்டால் புகார்தாரருக்கு ஏற்பட்ட மன உளைச்சல் இழப்பீடாக, ரூ. 5 ஆயிரம் மற்றும் புகார் செலவு தொகை ரூ.5 ஆயிரம், ஒரு மாத காலத்தில் செலுத்த வேண்டும். தவறும்பட்சத்தில் மொத்த தொகைக்கு, 9 சதவீத வட்டியுடன் கொடுக்க வேண்டும்' என தெரிவித்துள்ளார்.

