/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தேசிய வருவாய் வழி திறன் தேர்வுக்கு விண்ணப்பம்
/
தேசிய வருவாய் வழி திறன் தேர்வுக்கு விண்ணப்பம்
ADDED : டிச 31, 2025 05:03 AM
கோவை: மத்திய அரசின் தேசிய வருவாய் வழி திறன் தேர்வு (என்.எம்.எம்.எஸ்) வரும் ஜனவரி 10ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறையில் சிறப்பு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.
மாவட்டத்தில் 5,830 மாணவர்கள் இத்தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர்.
மத்திய அரசின் தேசிய வருவாய் வழி திறன் படிப்பு உதவித்தொகைத் திட்டத்தின் கீழ், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 8ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியருக்கு இந்த தேர்வு நடத்தப்படுகிறது.
இத்தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு, அவர்கள் 9ம் வகுப்பு முதல் பிளஸ்-2 முடிக்கும் வரை மாதந்தோறும் 1,000 ரூபாய் கல்வி உதவித்தொகையாக வழங்கப்படுகிறது.
கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்வில், மாவட்டத்தில் இருந்து 229 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். இந்த ஆண்டு தேர்ச்சி சதவீதத்தை மேலும் அதிகரிக்க, அனைத்து வட்டார கல்வி அதிகாரிகள் மற்றும் தலைமையாசிரியர்களுடன் முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி, நான்கு கட்டங்களாக இணைய வழி ஆலோசனை நடத்தினார்.
அரையாண்டு தேர்வு விடுமுறை நாட்களைப் பயனுள்ளதாக மாற்ற, பெற்றோரின் சம்மதத்துடன் பள்ளிகளில் சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

