ADDED : ஆக 02, 2026 05:10 AM
ஜன்னல் வழியாக கைவிட்டுமொபைல் திருடியவர் கைது ரேஸ்கோர்ஸ்: பாப்பநாயக்கன்பாளையம் ரோகித்குமார் வீட்டில் உறங்கும்போது, யாரோ ஜன்னல் வழியாக கைவிட்டு மொபைல் போனை திருடி சென்றனர். சிசிடிவி கேமராக்களை பார்வையிட்ட போலீசார், ராமநாதபுரம் விஜய் என்பவரை கைது செய்தனர்.
--வீட்டின் பூட்டை உடைத்து7 பவுன் நகைகள் கொள்ளை வடவள்ளி: வடவள்ளி பாக்யலட்சுமியின் பெற்றோர், கல்வீரம்பாளையம் எஸ்.பி.கே.நகரில் வசிக்கின்றனர். அவர்கள் ஜூலை 11ல் வெளியூர் சென்றனர். வீட்டை பராமரிக்க பாக்யலட்சுமி தினமும் போய்வந்தார். 30ம் தேதி சென்றபோது, பூட்டு உடைந்து கதவு திறந்து கிடந்தது. பீரோவில் இருந்த 7 சவரன் தங்க, வெள்ளி நகைகள் காணாமல் போயிருந்தன. போலீசார் விசாரிக்கின்றனர்.
குழந்தைகளை தெருக்களில்பிச்சை எடுக்க வைத்தவர் கைது செல்வபுரம்: சிவாலயா தியேட்டர் அருகில் சிறுவர்களை பிச்சை எடுக்க வைப்பதாக குழந்தைகள் பாதுகாப்பு அமைப்புக்கு புகார் வந்தது. மேற்பார்வையாளர் சூர்யமணி சென்று பார்த்தார். புகார் உண்மைதான் என தெரிந்தது.
போலீசில் புகார் கொடுத்தார். விசாரித்தனர். மகாராஷ்டிராவை சேர்ந்த நபூல்ஷாவும் அவரது அண்ணன் சபூல்ஷாவும் தங்கள் குழந்தைகளை பிச்சை எடுக்க வைத்தது தெரிந்தது. பிச்சை எடுக்கவில்லை; பேனா விற்கிறார்கள் என்று காட்ட சிறுவர்களின் கையில் சில பேனாக்களை கொடுத்து இருந்தனர். நபூல்ஷா, சபூல்ஷாவை கைது செய்தனர். குழந்தைகளை அரசு இல்லத்தில் தங்க வைத்து, உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர். எங்காவது குழந்தைகள் பிச்சை எடுப்பதை பார்த்தால், உடனே 1098 என்ற நம்பருக்கு போன் செய்யுங்கள் என அதிகாரிகள் கூறினர்.
--போதையில் கத்தி குத்து2 நண்பர்களுக்கு ஜெயில் குனியமுத்துார்: சுகுணாபுரம் நிசாருதீனுக்கும் சிவா என்பவருக்கும் முன்விரோதம் இருந்தது. 2021, செப்டம்பரில் நிசாருதீன் தனது நண்பர் ஹரிஷ்குமாருடன் மது அருந்திவிட்டு, போதையில் சிவாவை தேடி சென்று கத்தியால் குத்தினர். சிகிச்சைக்கு பிறகு சிவா உயிர் பிழைத்தார். குற்றவாளிகளை சிறையில் அடைத்தனர். 2வது கூடுதல் சார்பு நீதிமன்றத்தில் வழக்கு நடந்தது. நிசாருதீன், ஹரிஷ்குமாருக்கு தலா 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி கலைவாணி தீர்ப்பளித்தார்.
--கடையில் பதுக்கிய 45 கிலோகுட்காவுடன் ஒருவர் பிடிபட்டார் அன்னூர்: அருகம்பாளையத்தில் ஒரு கடையில் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக எஸ்.பி.சி.ஐ.டி. ஆபீசில் இருந்து அன்னூர் போலீசுக்கு தகவல் வந்தது. சப் இன்ஸ்பெக்டர் அழகேசன் தலைமையில் போலீசார் சோதனை நடத்தினர். ஹான்ஸ், விமல், கூல் லிப் உள்ளிட்ட 45 கிலோ குட்கா பொருட்கள் பதுக்கி இருந்தது தெரிந்தது. ஒரு லட்சம் ரூபாய் பணமும் இருந்தது. பொருட்களையும் பணத்தையும் கைப்பற்றினர். கருமத்தம்பட்டி மோகன்ராஜை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
புகார் கொடுத்த மாணவனைதாக்கிய 10 பேர் மீது வழக்கு பீளமேடு: திருவாரூர் யாசிர் அகமது, இங்கு ஒரு கல்லுாரியில் மூன்றாமாண்டு படிக்கிறார். நண்பர்களுடன் வீடு எடுத்து தங்கியுள்ளார். மொபைல் பறிப்பு தொடர்பாக இவர் கொடுத்த புகாரில் 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களின் நண்பர் மருதுபாண்டி, புகாரை வாபஸ் வாங்கும்படி யாசிரை மிரட்டினார். யாசிர் மறுத்துவிட்டார். மருது பாண்டி தன் நண்பர்கள் 9 பேருடன் யாசிரையும் அவருடன் இருந்த ரோகனையும் அடித்து உதைத்தனர். இருவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
10 பேர் மீது வழக்கு பதிவு செய்து, மருதுபாண்டி உட்பட 3 பேரை கைது செய்துள்ளனர்.
