ADDED : செப் 20, 2026 05:53 PM
மண்வெட்டியால் தாக்குதல்
பீளமேடு: பயனீர் மில் சாலையில் வசிக்கும் ஜெயா, அப்பகுதியிலேயே வீட்டு வேலைக்கு சென்று வருகிறார். கணவர் இல்லை; மகள்களின் திருமணத்திற்கு பிறகு தனியாக வசித்து வருகிறார். அவரது அண்ணன் வெள்ளியங்கரி மதுபோதையில் பணம் கேட்டு தொல்லை செய்துள்ளார். தரமறுத்த ஆத்திரத்தில் அருகில் இருந்த மண்வெட்டியால் தலையில் அடித்துள்ளார். காயமடைந்த ஜெயா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். புகார் அடிப்படையில் போலீசார் வெள்ளியங்கிரியை கைது செய்து விசாரிக்கின்றனர்.
நிதி நிறுவனத்தில் கொள்ளை
ஆர்.எஸ்.புரம்: மில்ரோடு பகுதியில் செல்லமுத்து என்பவர் நிதி நிறுவனம் ஒன்றை நடத்திவருகிறார். 18ம் தேதி இரவு நிறுவனத்தை பூட்டிச் சென்றார். மறுநாள் நிறுவன கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. 1.90 லட்சம் ரூபாய் திருடப்பட்டிருந்தது புகாரின் பேரில், ஆர்.எஸ்.புரம் போலீசார் சி.சி.டி.வி., பதிவுகளை கைப்பற்றி விசாரிக்கின்றனர்.
கயிறு இறுக்கி சிறுவன் பலி
சித்தாபுதுார்: ஆவாரம்பாளையம் சாலையில் வசிப்பவர் புதுக்கோட்டை சண்முகம். இவரது மூத்த மகன் தீபக், 12 வீட்டில் கயிறு ஒன்றை வைத்து விளையாடிக்கொண்டு இருந்துள்ளார். தவறுதலாக கயிறு கழுத்தை இறுக்கியதில் மூச்சுவிட முடியாமல் மயங்கியுள்ளார். உடனடியாக தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது, இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
புகையிலை பொருட்கள் விற்பனை
ரேஸ்கோர்ஸ்: பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் பூங்கா ஒன்றில் புகையிலை பொருட்கள் விற்பதாக கிடைத்த தகவல் அடிப்படையில், ரேஸ்கோர்ஸ் போலீசார் ஆய்வு செய்தனர். சோதனையில், 84 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்து, புதுக்கோட்டையை சேர்ந்த கவினை கைது செய்தனர்.
கஞ்சா வைத்திருந்த மூவர் கைது
போத்தனூர்: போத்தனுார் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து சென்ற போது வெள்ளலுார், ஹவுசிங் யூனிட் பின்புறம் சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த மூவரை பிடித்து விசாரித்தனர். அவர்கள் புலியகுளம் பெரியார் நகரை சேர்ந்த வெள்ளலுார், ஹவுசிங் யூனிட்டில் வசிக்கும் தினேஷ், 25, கிஷோர், 29, வெள்ளலுார், மகாலிங்கபுரம், ராமசாமி நகரை சேர்ந்த சபரீசன், 26 என்பதும், விற்பனைக்காக 200 கிராம் கஞ்சா வைத்திருந்ததும் தெரிந்தது. கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர்.
மிரட்டி பணம் பறிப்பு
ராமநாதபுரம்: இருகூரை சேர்ந்தவர் மிதுன்குமார்; எலக்ட்ரீசியன். பைக்கில் வந்த போது புலியகுளம் அம்மன்குளம் பகுதியில் அவசரத்துக்கு ஒதுங்கினார். அங்கிருந்த நான்கு பேர் கத்தி காட்டி மிரட்டி 7,000 ரூபாயை பறித்தனர். போனை பறித்து அதில் இருந்த 12,000 ரூபாயை வேறு வங்கி கணக்குக்கு மாற்றிவிட்டு தப்பினர். புகாரின் பேரில் ராமநாதபுரம் போலீசார், அம்மன்குளத்தை சேர்ந்த சஞ்சய், நவீன்குமாரை விசாரிக்கின்றனர். தலைமறைவாக உள்ள விக்னேஷ், ஆகாஷை தேடி வருகின்றனர்.
