ADDED : செப் 21, 2026 06:12 PM
மாணவர்கள் தகராறு; 10 பேர் மீது வழக்கு சிங்காநல்லுார்: தனியார் கல்லுாரி மாணவர்கள் வினோத்குமார், வெங்கடேஷ், ஈஸ்வரமூர்த்தி, ஆஸ்லே , பிரகதீஷ் ஆகிய ஐந்து பேர் ஓராண்டுக்கு முன் தென் திருப்பதி கோவிலுக்கு சென்று வந்தனர். அங்கு, பிரகதீஷ் தங்க செயின் மாயமானது. அதுகுறித்து வினோத்குமார் மீது சந்தேகம் ஏற்பட்டு நண்பர்களுக்குள் கருத்து வேறுபாடு எழுந்தது. இப்பிரச்னை குறித்து வெங்கடேஷ், ஈஸ்வரமூர்த்தி, ஆஸ்லே ஆகிய மூவரும் மேலும் 7 பேருடன் இருகூரில் வினோத்குமார் தங்கியிருந்த வீட்டின் கதவை உடைத்து தாக்கினர். சிங்காநல்லுார் போலீசார் 10 பேர் மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
பஸ் நிலைய கைவரிசை ; மடக்கி பிடித்த மக்கள் உக்கடம்: செல்வபுரத்தை சேர்ந்த ஜெகநாதன் பாலக்காடு செல்ல உக்கடம் பஸ் ஸ்டாண்ட்டில் தனது நண்பர் சுகுமாருடன் காத்திருந்தார். பஸ் ஏறும் போது ஒருவர் திடீரென பாக்கெட்டில் இருந்த மொபைல்போனை பறித்து ஓடினர். சத்தம் கேட்டு அருகிலிருந்தவர்கள் அந்நபரை பிடித்தனர். விசாரணையில் அவர் ஒடிசாவை சேர்ந்த தாஸ் டிசாந்து என தெரிந்தது. அவரை உக்கடம் போலீசார் கைது செய்தனர்.
புகையிலை விற்பனை; மூவர் கைது வடவள்ளி: தொண்டாமுத்துார் ரோட்டில் பெட்டிக்கடையில், புகையிலை பொருட்கள் விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சோதனையில், 12 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. புதுக்கோட்டை மாதவன், ரித்திக் ரோஷன், ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த காளீஸ்வரன் ஆகிய மூவரை கைது செய்தனர்.
