ADDED : செப் 26, 2026 07:04 PM
ரூ.20 லட்சம் மோசடி காந்திபுரம்: சித்தாபுதுார் மனோ கிங்ஸ்டன் என்பவருக்கு அரவிந்த்குமார் அறிமுகமானார். தனது நண்பர் தங்கா ராபின்சன் இங்கிலாந்தில் தொழிலதிபராக இருப்பதாகவும், இருவரும் இணைந்து எலைட் ஓவர்சீஸ் எஜூகேஷன் என்ற நிறுவனத்தின் மூலம் வெளிநாட்டில் வேலை, விசா வாங்கி தருவதாகவும் கூறினார். 2023 டிச.,ல் ரூ.10 லட்சம் வீதம், அரவிந்த்குமாரின் மனைவி யுகன்யா, தங்கா ராபின்சன் வங்கி கணக்குகளுக்கு பணம் அனுப்பினார். ஆனால் வேலை வாங்கித்தரவில்லை; பணத்தையும் திரும்பத்தரவில்லை. மனோ கிங்ஸ்டன் புகாரில் காட்டூர் போலீசார் அரவிந்த்குமார், யுகன்யா, தங்கா ராபின்சன் மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
கேட்பாரற்ற பைக்குகள் பறிமுதல் ராமநாதபுரம்: போலீசார் ரோந்து பணியின் போது கேட்பாரறின்றி ரோட்டில் நிறுத்தப்பட்ட 10 பைக்குகளை கண்காணித்தனர். உரிமையாளர்கள் குறித்து விசாரித்தனர். யாரும் உரிமை கோராததால், பைக்குகளை பறிமுதல் செய்தனர். உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி உரிய பதில் வராத நிலையில் ஏலம் விடப்படும் என போலீசார் தெரிவித்தனர்.
புகையிலை பொருட்கள் பறிமுதல் உக்கடம்: இடையர் வீதியை சேர்ந்தவர் சஞ்சித். அவருக்கு தெரிந்த மகேந்திரன் புகையிலை பொருட்களை கொடுத்து விற்க அறிவுறுத்தினார். சப்ளையர் இருவரை அறிமுகப்படுத்தி போத்தனுார் செட்டிபாளையம் ரோட்டில் ஒரு கடையிலும், ஒத்தக்கால்மண்டபத்தில் ராமச்சந்திரன் என்பவரது வீட்டிலும் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த, புகையிலை பொருட்களை காண்பித்தார். சஞ்சித் அளித்த புகாரின் பேரில் வெரைட்டிஹால் ரோடு போலீசார் விசாரணை நடத்தி, மலுமிச்சம்பட்டி அச்சுதராஜன், புதுக்கோட்டை பிரதீப், உக்கடம் மகேந்திரன், ஒத்தக்கால்மண்டபம் ராமச்சந்திரன் ஆகிய நான்கு பேர் மீது வழக்கு பதிந்து, 270 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
சரவணம்பட்டி: போலீசார் ரோந்து பணியின் போது சரவணம்பட்டி – துடியலுார் ரோட்டில், புகையிலை பொருட்கள் விற்பனை செய்த சரவணம்பட்டி மதன் மற்றும் விக்னேஷை கைது செய்தனர்.
ஒரு நாளில் 700 மெசேஜ் அனுப்பி மோசடி கோவை: ஆனைமலையை சேர்ந்த ரொனால்டு செல்டன் போன் எண்ணுக்கு இம்மாதம், 7 முதல் 14ம் தேதி வரை நாள் ஒன்றுக்கு 700க்கும் மேற்பட்ட மெசேஜ்கள் வந்தன. பல்வேறு மாநிலங்களில் இருந்து மிஸ்டு் கால்களும் வந்தன. தொழில்நுட்ப கோளாறு என அவற்றை அழித்து விட்டு கண்டுகொள்ளாமல் இருந்தார். ஆனால், அவரது வங்கிக்கணக்கில் இருந்து ரூ.9.78 லட்சம் எடுக்கப்பட்டது தெரிந்தது. மாவட்ட சைபர் கிரைம் போலீசார் விசாரிக்கின்றனர்.
கடைக்காரருக்கு கத்தி குத்து: மதுக்கரை: மேற்கு புறவழி சாலை, அறிவொளி நகரில் சாரமேடு, ஷபா கார்டனை சேர்ந்த தவுபிக், 35 பெட்டிக்கடை வைத்துள்ளார். நேற்று மாலை கடைக்கு வந்து சிகரெட் வாங்கிய மூவரிடம், தவுபிக் பணம் கேட்டார். கடையிலிருந்து வெளியே வந்து பணத்தை கூறினர். வெளியே வந்த தவுபிக்கை, மூவரும் தாக்கினர். அப்போது ஒருவர் கத்தியால், தவுபிக்கின் தோள்பட்டை, கன்னத்தில் குத்தினார். மூவரும் பைக்கில் தப்பினர். காயமடைந்த தவுபிக், அரசு மருத்துவமனையில் சேர்ந்தார். மதுக்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.
