UPDATED : செப் 28, 2026 06:27 PM
ADDED : செப் 28, 2026 06:13 PM
பணம் கேட்டு மிரட்டல்
ராமநாதபுரம் : புலியகுளத்தை சேர்ந்தவர் ரங்கநாதன்; பெயின்டர். பங்கஜாமில் ரோட்டில், பார் ஒன்றில் மது குடித்துக் கொண்டிருந்தவரிடம், அதே பகுதியை சேர்ந்த சந்திரசேகர் பணம் கேட்டார். பணம் தரமறுக்கவே, தகாத வார்த்தைகளால் திட்டி, அடித்து தகராறில் ஈடுபட்டார். அருகில் இருந்த நபர்கள் வந்ததும் மிரட்டி தப்பினார். புகாரின் பேரில், ராமநாதபுரம் போலீசார் சந்திரசேகரை கைது செய்தனர்.
மாடியிலிருந்து தவறி விழுந்து பலி
ரத்தினபுரி: கேரளத்தை சேர்ந்த வைஷாக்; பேக்கரி ஊழியர். 23ம் தேதி நள்ளிரவு பணியின் போது முதல் மாடியில் இருந்து தவறி விழுந்ததாக பேக்கரி உரிமையாளர் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தார். படுகாயமடைந்த வைஷாக் கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். நேற்று முன்தினம் உயிரிழந்தார். ரத்தினபுரி போலீசார் விசாரிக்கின்றனர்.
புகையிலை பொருட்கள் விற்பனை
உக்கடம்: பெரியகடை வீதி போலீசார் ரோந்து சென்றபோது, தாமஸ் வீதியில் தகவலின் பேரில் சோதனை நடத்தினர். அதில், புகையிலை பொருட்கள் மற்றும் பட்டாசுகளை சட்டவிரோதமாக விற்பனை செய்வது தெரியவந்தது. இதன்படி, தாமஸ் வீதியை சேர்ந்த மகேந்திராவை கைது செய்தனர்.
பீளமேடு: ஆவாரம்பாளையம் துரைசாமி லே அவுட், ஆர்.வி.கே. ஸ்டார் மளிகை கடையில் புகையிலை பொருட்கள் விற்பனை குறித்து பீளமேடு போலீசார் சோதனை செய்தனர். இதில், 9 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்து, அதே பகுதியை சேர்ந்த விஜயகுமாரை கைது செய்தனர்.
காளப்பட்டி: காளப்பட்டி ரோடு, பெட்டிக்கடை ஒன்றில் புகையிலை பொருட்கள் விற்பனை குறித்து போலீசார் சோதனை செய்தனர். 4 கிலோ புகையிலைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டது. இது தொடர்பாக கோவையில் தங்கி பணிபுரியும் புதுக்கோட்டை விக்னேஷை பீளமேடு போலீசார் கைது செய்தனர்.
