UPDATED : அக் 05, 2026 10:32 AM
ADDED : அக் 04, 2026 07:36 PM
புகையிலை பொருட்கள் விற்பனை
காந்திபுரம்: ரத்தினபுரி போலீசார் ரோந்து பணியின் போது, புகையிலை பொருட்கள் காந்திபுரம் 4வது வீதியில் உள்ள பெட்டிக்கடையில் விற்பனை செய்வது தெரிந்தது. 23.4 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். ராமநாதபுரம் ரகுநாதன் என்பவரை கைது செய்தனர்.
சரவணம்பட்டி: சின்னவேடம்பட்டியில் பெட்டிக்கடை ஒன்றில் சோதனையிட்ட போது புகையிலை பொருட்கள் பதுக்கி விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. அங்கிருந்து, 14 கிலோ பறிமுதல் செய்யப்பட்டு கோவையில் வசிக்கும், புதுக்கோட்டை தவசீலனை கைது செய்தனர். கீர்த்திராஜா என்பவரை சரவணம்பட்டி போலீசார் தேடி வருகின்றனர்.
போதைப்பொருள் பறிமுதல்
சுந்தராபுரம் : போலீசார், மதுக்கரை மார்க்கெட் ரோடு, மோகன் நகர் ரயில்வே மேம்பாலத்தின் கீழ் பகுதியில் ரோந்து சென்றனர். சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த மூவரிடம் விசாரித்தனர். அவர்கள் குறிச்சி ஹவுசிங் யூனிட் பேஸ் 2 சேர்ந்த அண்ணாமலை, 25, மதுரை, அழகர்கோவிலை சேர்ந்த அருண்பாண்டி, 27 மற்றும் கொடைக்கானல், ஆலம்பட்டி பஸ் ஸ்டாப், பண்ணைக்காடை சேர்ந்த கோபிநாத், 21 என தெரிந்தது. விற்பனைக்காக, 58 கிராம் மெத்தாம்பெட்டமைன் வைத்திருப்பது தெரிந்தது. போதை பொருள், மொபைல்போனை பறிமுதல் செய்த போலீசார் மூவரையும் கைது செய்தனர்.
அபார்ட்மென்ட் மோசடி
சேலத்தை சேர்ந்தவர் பாஸ்கர். குறைந்த விலையில் வீடு வாங்கி தருவதாக கூறியவர்களை நம்பி, 2017 –18 ம் ஆண்டுகளில் ரூ.11.77 லட்சத்தை வங்கிகணக்கில் செலுத்தினார். 9 ஆண்டுகளாகியும் வீடோ, பணமோ தரவில்லை என போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். இவருடன் சிங்காநல்லுார் முகமது ஜாபர் அலி ரூ.17 லட்சம், இடையர்பாளையம் ராதிகா சேத்தன் ரூ.9 லட்சம், இருகூர் பார்த்திபன், ரூ.10 லட்சம் என பலரிடம் மோசடி செய்துள்ளதாகவும், பணத்தை திருப்பி கேட்டால் கொலை மிரட்டல் விடுவதாகவும் புகாரில் கூறப்பட்டிருந்தது. சிங்காநல்லுார் போலீசார் மோசடியில் ஈடுபட்ட சிங்காநல்லுார் ஜெகநாதன், சேலம் கண்ணன், சிங்காநல்லுார் நவீன், பல்லடம் ரமேஷ் ஆகியோர் மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
கஞ்சா சாக்லேட் விற்றவர் மீது ‘குண்டாஸ்’
மதுக்கரை போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட பகுதியில், 10 கிலோ கஞ்சா சாக்லேட் வைத்திருந்த ரவீந்திர குஷ்வாஹா, 35, சிறையில் அடைக்கப்பட்டார். அவர் மீது குண்டர் சட்டத்தில், நடவடிக்கை எடுக்க எஸ்.பி., பவன்குமார் பரிந்துரைத்தார். கலெக்டர் பவன்குமார் உத்தரவின்படி நடவடிக்கை எடுக்கப்பட்டது.
பறந்தது பொம்மை டிரோன்
பீளமேடு: தமிழக முதல்வர் வருகையை முன்னிட்டு கோவை விமானநிலைய பகுதிகளில், நேற்று பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. இரு தினங்களுக்கு முன், விமான நிலைய பாதுகாக்கப்பட்ட எல்லைக்குள் அத்துமீறி டிரோன் பறக்க விட்டதாக, விமான நிலைய தலைமை பாதுகாப்பு அதிகாரி சந்தன் புகார் அளித்து இருந்தார். பீளமேடு போலீசார் விசாரித்தனர். அதில், குழந்தைகள் விளையாட்டிற்காக பயன்படுத்தும் டிரோன் பறக்க விடப்பட்டது உறுதியானது.
பீளமேடு போலீசார் கூறுகையில், ‘ அதில் புகைப்படம் எடுப்பது, வீடியோ பதிவு போன்ற வசதிகள் இல்லை. குழந்தைகள் பயன்படுத்தும் டிரோன் என்றாலும் அப்பகுதியில் பறக்கவிட அனுமதி கிடையாது. இதுகுறித்து தொடர்ந்து விசாரிக்கிறோம்’ என்றனர்.
