UPDATED : அக் 06, 2026 01:34 AM
ADDED : அக் 05, 2026 08:06 PM
புகையிலை பொருட்கள் விற்பனை
வடவள்ளி: போலீசார் ரோந்து பணியின் போது, தொண்டாமுத்துார் ரோட்டில் பெட்டிக்கடையில் புகையிலை பொருட்கள் குறித்து சோதனையிட்டனர். விற்பனைக்கு வைத்திருந்த புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, புதுக்கோட்டை விக்னேஷ்வரன், தாமஸ், பிரவீன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
சரவணம்பட்டி: ரோந்து பணியின் போது, கணபதி சங்கனுார் ரோட்டிலுள்ள பெட்டிக்கடையில் சோதனை செய்து 2 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து, கடை உரிமையாளர் கரூர் சஞ்சய்குமார் மீது வழக்கு பதிந்தனர்.
நண்பரை கத்தியால் குத்தியவர் கைது
ராமாநாதபுரம்: புலியகுளத்தை சேர்ந்த நண்பர்கள், நவீன்குமார், கார்த்திக். பெயின்டராக பணிபுரிகின்றனர். போத்தனுார் குடோனில் பணியில் இருந்தபோது, கான்ட்ராக்டர் பயன்படுத்திய பெயின்டிங் கம்ப்ரசரை கார்த்திக் எடுத்துச் சென்று ரூ.2,500 விற்றதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில், கார்த்திக் கத்தியால் நவீன்குமாரை குத்தினார். காயமடைந்த நவீன்குமார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ராமநாதபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.
மனைவி, மாமியாருக்கு குத்து
கோவை: திருப்பூரை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி, 24. இவரது மனைவி ராமசெட்டிபாளையத்தை சேர்ந்த கவிதா,21. தம்பதி ராமசெட்டிபாளையத்திலேயே வசித்து வந்தனர். திருமணம் ஆனது முதல் தம்பதி இடையே தகராறு இருந்து வந்தது. அடித்து துன்புறுத்துவதாக கணவர் மீது பேரூர் மகளிர் போலீசில் கவிதா புகார் அளித்தார். இதனால் கோபமடைந்த கிருஷ்ணமூர்த்தி, கவிதாவை தாக்கினார். கவிதாவின் தாய் ஜோதிமணி கேட்டபோது கிருஷ்ணமூர்த்தி அங்கிருந்த கத்தரிக்கோலால் கவிதா, ஜோதிமணியை குத்தினார். இருவரும் சுண்டக்காமுத்துார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். பேரூர் போலீசார் வழக்கு பதிந்து, கிருஷ்ணமூர்த்தியை கைது செய்தனர்.
