-வீட்டை விட்டு ஓடி வந்த சிறுமிகள் மீட்பு
ஈரோட்டில் ஒரு அரசு பள்ளியில் 14 வயது கொண்ட இரு சிறுமிகள் 9ம் வகுப்பு படித்து வருகின்றனர். இவர்கள் இருவரையும், இவர்களது பெற்றோர் சரியாக படிக்கவில்லை என கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் நேற்று முன் தினம் பள்ளிக்குச் சென்ற சிறுமிகள் இருவரும் வீட்டுக்கு திரும்பாமல், குன்னூரில் உள்ள ஒரு பள்ளி சிறுமியின் பாட்டி வீட்டிற்கு செல்வதற்காக, பஸ் வாயிலாக ஈரோட்டில் இருந்து மேட்டுப்பாளையம் பஸ் நிலையத்திற்கு வந்தனர்.
அப்போது, அவ்வழியாக ரோந்து சென்ற, மேட்டுப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிகண்டன், தலைமையிலான போலீசார், பள்ளி சீருடையில் நின்றுக் கொண்டிருந்த இரு சிறுமிகளையும் விசாரித்தனர்.
விசாரணையில், இருவரும் பெற்றோர் கண்டித்ததால் வீட்டை விட்டு ஓடி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் சிறுமிகளின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்து வரவழைத்து, சிறுமிகளை பெற்றோர் உடன் அனுப்பி வைத்தனர்.
---மனைவியை கத்தியால் குத்திய கணவன் தப்பி ஓட்டம்
மேட்டுப்பாளையம் மகாதேவபுரம் பெருமாள் லே-அவுட் பகுதியைச் சேர்ந்தவர் ஹக்கீம், 36. இவரது மனைவி சாயிதா, 32. இந்த தம்பதியினருக்கு 8 வயதில் ஒரு மகள் உள்ளார்.
கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக சாயிதா தன் கணவருடன் வாழ விருப்பமில்லை என கூறி, தந்தை மஜீத்துடன் பெற்றோர் வீட்டிற்கு சென்றார். ஆத்திரமடைந்த கணவர் ஹக்கீம் இரவு மாமனார் வீட்டிற்கு சென்று, மனைவி சாயிதாவை குடும்பம் நடத்த வருமாறு அழைத்தார்.
அவர் வர மறுக்கவே, வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றி, ஹக்கீம் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மனைவி சாயிதாவை கழுத்து பகுதியில் குத்தினார். தடுக்க சென்ற மாமனார் மஜீத், 72, மற்றும் மாமியார் சமையா, 62, ஆகியோரையும் கத்தியால் குத்தினார். பின் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
அக்கம்பக்கத்தினர் இவர்கள் மூவரையும் மீட்டு, மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கும், பின் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்தனர். இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப் பதிந்து தப்பி ஓடிய ஹக்கீமை தேடி வருகின்றனர்.